கச்சதீவு தமிழகத்தில் இருந்திருந்தால் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறோம்’ என திராவிட முன்னேற்ற கழக தொழிற்சங்க தலைவரும் சட்டத்தரணியுமான கரூர் எம்.கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் 08.08.2022 இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளை தொடராமல் செய்வதற்கான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
அதற்காக தனியான ஒரு அமைச்சரை தமிழக அரசாங்கம் நியமித்திருக்கின்றது.
எப்பொழுதெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகின்றதோ அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் செயற்பட்டு கொண்டிருக்கின்றது.
கடந்த ஓராண்டுகளாக எங்களது ஆட்சி வந்ததிலிருந்து பல்வேறு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் உதவி செய்திருக்கின்றோம்.
தமிழக முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
எனவே நீண்ட நாட்களாக தொடரும் இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினையில் இரண்டு நாடுகளும் சேர்ந்து விரைவில் முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன். வரலாற்று ரீதியாக நாங்கள் பார்ப்போமானால் கச்சதீவு எங்கிருக்கின்றது என்பதை இங்கு உள்ளவர்களுக்கும் தெரியும் அங்கு உள்ளவர்களுக்கும் தெரியும்.
கச்சதீவு தமிழகத்தில் இருந்திருந்தால் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறோம். அதனால் சட்டமன்றத்தில் கச்சதீவு மீட்க வேண்டுமென தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கச்சதீவை மீட்போம் எனக் கூறியிருக்கின்றோம். அதனை மீட்டெடுப்பதன் மூலம் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தீரும் என்ற அடிப்படையில் மீண்டும் கச்சதீவை எங்களுக்கு தர வேண்டும் என கேட்டு இருக்கின்றோம்.
புளொட்டின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைப்பையேற்று நான் இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இங்கு வருகைதந்தேன். தமிழகத்தில் இருந்து பல்வேறு உதவிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை தமிழர்களுக்கு செய்திருக்கின்றார்கள். அதற்கு நன்றி தெரிவிக்கின்ற வகையில் புளொட் மாநாட்டிலே தீர்மானத்தை கொண்டு வருகின்றோம் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வரிடம் கொடுக்க வேண்டும் என என்னிடத்தில் தெரிவித்தார்கள்.
அதனடிப்படையில் நான் புளொட் மாநாட்டில் கலந்து கொண்டு இருந்தேன்” என்றார்.