மண்ணெண்ணெய் விலையுயர்வு! பணக்காரர்களுக்கு கடலைக் கொடுக்கும் திட்டம்

மண்ணெண்ணெய் விலையை உயர்த்தி, சிறு மீனவர்களை வேலையிழக்கச் செய்து, கடல் வளத்தை பெரும் செல்வந்தர்களுக்கு கிடைக்கச் செய்யும் திட்டம் உள்ளதா என தென்னிலங்கையின் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவர் எழுப்பியுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது. இதற்கமைய ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

“அண்மையில், இந்த நாட்டில் சிறு மீன்பிடித் தொழிலை நசுக்குவதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம் மீன்பிடிக் கொள்கையாகக் கொண்டு வந்தது. அதாவது புதிய படகுகள் உற்பத்திக்குத் தடை விதிக்கப்பட்டது.

55 அடிக்கு மேல் நீளமுடைய படகுகளை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும் எனக் கூறினார்கள். அதற்கு ஐம்பது வீதம் நிவாரணமும் வழங்கப்பட்டது.” இலங்கை வரலாற்றில் வரலாறு காணாத வகையில் மண்ணெண்ணெய் விலை உயர்வடைந்துள்ளமையால் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்ற பாரிய கேள்வி எழுந்துள்ளதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண ரொஷாந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பின் மூலம் இந்த யோசனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளொன்றுக்கு சுமார் 40 லீற்றர் மண்ணெண்ணெய் பயன்படுத்தும் சிறிய மீன்பிடி தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் மற்றும் எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு 15,000 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவழிக்க வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“அதுமாத்திரமல்ல, எண்ணெய் கொள்வனவு செய்ய வேண்டும். முன்னர் எண்ணெய் விலை 650 ரூபாய். இன்று 3,000 ரூபாய்.” தற்போதுள்ள நிலைமைக்கு உடனடி தீர்வைக் கோரி மீனவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சிலாபத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் எந்தவொரு பொறுப்பான அதிகாரியும் அங்கு வரவில்லை எனவும் அருண ரொஷாந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறுதொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடும் வாய்ப்பை முடக்கியதன் ஊடாக இயற்கையாகவே பணக்காரர்களின் கைகளுக்கு கடல் வளம் செல்லும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ள மீனவ சங்கத் தலைவர், எரிபொருள் விலையேற்றம் காரணமாக இனி மீன்பிடியில் ஈடுபடப்போவது இல்லையென தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக மூன்றரை மாதங்களுக்கும் மேலாக சிறிய மீன்பிடி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் அக்காலப்பகுதியில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட நான்கு பேச்சுவார்த்தைகள் தீர்மானம் எதுவும் எட்டப்படாமல் நிறைடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin