மட்டக்களப்பு- ஏறாவூரில் கடந்த மே 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை செப்டம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏறாவூர் வன்முறைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபர் நேற்று (26) ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
அப்துல் மஜீட் பிர்தௌஸ் என்ற சந்தேக நபரே இவ்வாறு சரணடைந்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபரை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிவான் அன்வர் சதாத் முன்னிலையில் முற்படுத்தியதையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான நஸீர் அஹமட்டின், வாடகைக் காரியாலயம், அவரது உறவினரின் வீடு மற்றும் ஹோட்டல்களுக்கு தீயிட்டுக் கொளுத்தியமை, கொள்ளையயடித்தமை அத்துடன் 3 ஆடைத்தொழிற்சாலைகளை சேதப்படுத்தியமை தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் ஏற்கெனவே 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.