நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இரு வாரங்களுக்கு முடக்கப்படுவதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இன்று வெள்ளிக் கிழமை நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயற்குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.