கோட்டாபயவுக்கு நடந்த அதே அவமானம் ரணிலுக்கும் ஏற்படும்! பொன்சேகா எச்சரிக்கை

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பாதுகாக்கவே போராட்டச் செயற்பாட்டாளர்களை ரணில் விக்ரமசிங்க கைது செய்து வருவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் பேசியதாவது, நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுத்து அவரைப் பாதுகாக்கவே போராட்டச்செயற்பாட்டாளர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்து அடக்கி வருகின்றார்.

இவ்வாறான அடக்கும் நடவடிக்கைகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்த அவமானத்தைப் போல் இந்நாள் அதிபரும் சந்திக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும், 69 லட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என்று மார்தட்டி வீர வசனம் பேசிய கோட்டாபய இறுதியில் இலங்கையை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று எந்த நாடும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் அவர் மீண்டும் இலங்கைக்கு வர எத்தனிக்கின்றார் என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin