கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் வைத்தியசாலைக்குள் நுழைந்து வேண்டுமென்றே கொரோனா பரவும் அபாயத்தை உண்டாக்கியதுடன், வைத்தியசாலை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த பொதுச் சுகாதார பரிசோதகருக்கு எதிராக யாழ்.ஊர்காவற்றுறை வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் வழங்கியுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கடந்த 12.08.2021 அன்று தமது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை
தீவிர தன்மை குறைந்த தொற்றாளர் என்ற அடிப்படையில் நாவற்குழி இடைத்தங்கல் முகாமுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அல்லைப்பிட்டி பிரதேச பொது சுகாதார பரிசோதகர் என்று தன்னை அறிமுகப்படுத்தியவர்
சீருடை இன்றி மருத்துவமனைக்குள் பிரவேசித்து நோயாளர் அவசர சிகிச்சைப் பிரிவல் பலமுறை நுழைந்து அந்த நோயாளியை இடைத்தங்கல் முகாமுக்கு மாற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். மருத்துவர்கள் நோயின் நிலையையும்,
சுகாதார அமைச்சின் சுற்றுநிருபம் பற்றிய அறிவுறுத்தல் வழங்கியும் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தும் விதத்தில் அவர் நடந்து கொண்டார். அத்துடன், பலமுறை வைத்தியசாலை சிற்றூழியர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
அவர் தன்னுடன் நோயாளியின் மகனை முதலாம்தர தொற்று தொடர்பாளரையும் அழைத்து வந்து தொற்று பரவும் சூழலை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன்,
கொரோனா பரவல் தன்மையை கட்டுப்படுத்த உதவுவதுடன், மருத்துவமனை ஊழியர்கள் பணிபுரிவதற்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த முறைப்பாட்டில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.