சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு,யாழில் இன்று(30) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் முன்பாக இன்று காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, யாழ்.பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என்ற பதாகை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் இடங்களில் இந்தப் போராட்டம் இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் நாவலர் வீதியில் உள்ள யு.என்.எச்.சி.ஆர். அலுவலக முன்றலிலும் மற்றும் யாழ். நகரிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலும், வவுனியாவில் வவு.குடியிருப்பு பிள்ளையார் கோயில் முன்றலிலும்,மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர்ப்பகுதியிலும், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரப் பகுதியிலும், திருகோணமலையில் திருமலை மாவட்ட செயலக முன்றலிலும் போராட்டங்கள் முன்னனெடுக்கப்படவுள்ளன.
மேலும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களான கனடா, அமெரிக்கா, ஜேர்மன், லண்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.