மட்டக்களப்பு -தன்னாமுனையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு கோரியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 30 வது நாள் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச தினத்தையிட்டு அவர்களுக்கு நீதிகோரியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் கண்டுமணி லதன் தலைமையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஏறாவூர் தன்னாமுனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்னால் ஒன்றிணைந்த பொதுமக்கள் “நடமாடும் சுதந்திரம் எங்கள் உரிமை”, “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “மத சுதந்திரத்தை தடுக்காதே”, “இலங்கையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு”,“காணாமல் போன உறவுகளுக்கு சர்வதேசமே நீதியை பெற்றுத்தா” போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.