பனிப்போரை அமைதியான முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார்.
1985 இல் ஆட்சிக்கு வந்த கோர்பச்சேவ், அப்போதைய சோவியத் ஒன்றியத்தை உலகிற்குத் திறந்து, உள்நாட்டில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். எனினும் நவீன ரஷ்யாவினால் தோன்றிய சோவியத் ஒன்றியத்தின் மெதுவான சரிவை அவரால் தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஐ.நா.வின் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் “வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த தலைவர்” என்று அவரை புகழ்ந்துள்ளார். மிகைல் கோர்பச்சேவ் என்ற ஒரு உயர்ந்த உலகளாவிய தலைவரை, உலகம் இழந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகைல் கோர்பச்சேவ் நீண்ட காலமாக கடுமையான நோயால் அவதிப்பட்டு வந்ததாக, அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம், அவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன, இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கோர்பச்சேவ் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் Ursula von der Leyen, “சுதந்திர ஐரோப்பாவுக்கான வழியைத் திறந்த ஒரு நம்பகமான மற்றும் மரியாதைக்குரிய தலைவர்” என்று அவரைப் பாராட்டியுள்ளார்.
மேலும்,உக்ரைனில் புடினின் ஆக்கிரமிப்புமிக்க இந்த காலத்தில், சோவியத் சமுதாயத்தை திறப்பதற்கான கோர்பசேவின் அயராத அர்ப்பணிப்பு அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
கோர்பச்சேவ் 54 வயதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாட்டின் தலைவராகவும் தெரிவானார்.
அந்த நேரத்தில், அவர் பொலிட்பீரோ என்று அழைக்கப்படும் ஆளும் ஆட்சிக் குழுவின் இளைய உறுப்பினராக இருந்தார். அவரது கிளாஸ்னோஸ்ட் கொள்கை, அல்லது வெளிப்படையான கொள்கையானது, நினைத்துப் பார்க்க முடியாத வகையில் மக்கள் அரசாங்கத்தை விமர்சிக்க அனுமதித்தது.
சர்வதேச அளவில் அவர் அமெரிக்காவுடன் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களை எட்டியுள்ளார்.
கிழக்கு-மேற்கு உறவுகளில் தீவிர மாற்றங்களில் அவர் முக்கிய பங்கு வகித்ததற்காக,1990 இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1991 க்குப் பிறகு தோன்றிய புதிய ரஷ்யாவில் அவர் கல்வி மற்றும் மனிதாபிமான திட்டங்களில் கவனம் செலுத்தினார்.
1996 இல் அரசியல் வாழ்க்கையில் ஒரு மோசமான பின்னடைவை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலில் வெறும் 0.5% வாக்குகளை மாத்திரமே அவர் பெற்றார்.
ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் கீழ் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய ஹென்றி கிஸ்ஸிங்கர், தமது கருத்து ஒன்றில் கோர்பச்சேவ், மனித குலத்திற்கும், ரஷ்ய மக்களுக்கும் நன்மை பயக்கும் வரலாற்று மாற்றங்களைத் தொடங்கிய மனிதராக வரலாற்றில் நினைவுகூரப்படுவார் என்று கூறியுள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனில் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரியான விளாடிமிர் ரோகோவ் என்பவர், கோர்பச்சேவ் “(சோவியத்) யூனியனை வேண்டுமென்றே அதன் அழிவுக்கு இட்டுச் சென்றார் என்றும் அவரை துரோகி என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை 1999 ஆம் ஆண்டு இறந்த அவரது மனைவி ரைசாவுக்கு அடுத்தபடியாக, பல முக்கிய ரஷ்யர்கள் அடக்கம் செய்யப்படுள்ள மொஸ்கோவின் நோவோடெவிச்சி கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்படுவார் என்று டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.