உலகளாவியரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் ஐந்தாவது மாதமாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உலகளாவியரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன.
இந்த நிலையில் தற்போது அவற்றின் விலைகள் சரிந்துவருவதாகவும் ஒப்பீட்டுரீதியில் எண்ணெய் விலைகள் சரிந்துவருவதாகவும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது.
சூரியகாந்தி, மற்றும் தாவர எண்ணெய்களின் விலைகள் சரிவடைந்த போதிலும் அமெரிக்காவில் நிலவிய பாதகமான வானிலையின் தாக்கம் காரணமாக சோயா அவரையின் விலை குறித்து கவலைகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை 5.1வீதம் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை ஏனைய தானியங்களின் விலை 1.4 வீதம் சரிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் உணவு உற்பத்தி வாய்ப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றமும் உக்ரெனின் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து மீண்டும் தானிய ஏற்றுமதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலைமையும் இதற்குக்காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.