மொனராகலை மாவட்டம், புத்தள கட்டுகஹகல்கே வாவியிலிருந்து மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மூவரும் மொனராகலை மஹனாம தேசிய பாடசாலையில் கல்வி கற்று வந்தவர்களாவர். மொனராகலை பட்டுகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த ஆரம்.எம்.தனஞ்சய தேஷான் (வயது 18), மொனராகலை சிறிகல மற்றும் ரத்தனப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த டி.பி.ரந்தீப தாரக்க (வயது 18), கோரள கமகே இமேஷ் (வயது 18) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
மூவரும் தமது நண்பர்களைப் பார்வையிடுவதற்காக நேற்றுக் காலை வீடுகளிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர் என்றும், மாலை வரை வீடு திரும்பாததன் காரணமாக பெற்றோர் அவர்களது தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
தொலைபேசி அழைப்புகள் செயலிழந்துக் காணப்பட்டதால் குறித்த மாணவர்களில் ஒருவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், புத்தள படல்கும்புர வீதி, கட்டுகஹகல்கே வாவிக்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், தொலைபேசிகள் மற்றும் ஆண்கள் அணியும் ஆடைகள் காணப்படுகின்றன என்று மீனவர்கள் சிலர் புத்தள பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக பொலிஸார் குறித்த இடத்துக்கு வந்து பிரதேச மக்களின் உதவியுடன் தேடிப் பார்த்தபோதே குறித்த மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த மூவரும் வாவியில் நீராடிக்கொண்டிருந்ததை பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.