திருகோணமலை மூதூர் வீரமாதா நகர் நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் பிரநிதிகளுக்கும், அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரட்ண உள்ளடங்கலான குழுவினருக்குமிடையே நேற்று காலை 11.00 மணியளவில் அதன் செயலாளர் க.காண்டீபன் தலமையில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.
பெரும்போகச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர் கொண்டுள்ள கட்டுக்கடங்காத உழவுக்கூலி, பசளை, மற்றும் குளங்கள் அபிவிருத்தி செய்யப்படாமை போன்ற சவால்களைக் குறைத்துக் கொள்வதற்கு உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளரும், சட்டத்தரணியுமான திரு. அருண் ஹேமச்சந்திரா அவர்களினால் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் கலந்து கொண்ட விவசாயிகளும் சம்மேளனப் பிரதிநிதிகளும் தமது பிரதேசத்தின் விவசாய அபிவிருத்தி தொடர்பில் அரசும், அரசாங்கமும், அதிகாரிகளும், அரசியல் வாதிகளும், பாராமுகமாகச் செயற்படுவதாகவும்,
இம்முறை பெரும் போகச் செய்கையின் பின்னர் விவசாயிகளை சோற்றுக்கு கையேந்த வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டியதுடன் வருடத்தில் ஒரு தடவை மட்டும் அதுவும் மழைவீழ்ச்சியை நம்பி தமது உணவுத் தேவைக்காக மேற்கொள்ளும் விவசாயச் செய்கைக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்தனர்.