மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு கடற்றொழிலாளர்களுக்கு பாரிய பாதிப்பு…! சஜித்.

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமதாக இருந்த காலத்தில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் அதேபோன்று கடற்றொழிலுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலைகள் தீவிரமாக அதிகரித்துள்ளதால் கடற்றொழில்துறை பாரியளவிலான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இலங்கையின் உணவு பழக்கவழக்கத்தில், அதிகளவு போசணையை தரக்கூடிய கடலுணவுகளை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் சிறுவர் மந்தபோசணை அதிகரிப்ப பாரிய அச்சுறுத்தல் நிலைமையாக மாறியுள்ளது.

இந்த நிலைமையானது கடற்றொழில் துறையில் ஈடுபடும் தரப்பினருக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும் ஒரு விடயமாக மாறியுள்ளது. 4,500 அழ்கடல் படகுகள், 25,000 ஒரு நாள் படகுகளுக்கு தேவையான டீசல், மண்ணெண்ணெயை விநியோகிப்பதற்கு அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதனால் இந்த நெருக்கடியானது மிகவும் தீவிர நிலைமையை அடைந்துள்ளது. விசேடமாக மண்ணெண்ணெயை 85 ரூபாயிலிருந்து 340 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கடற்றொழில் ஈடுபடும் தரப்பினரது வாழ்வாதாரம் இழக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் அசாதாரண நிலைமையாகும்.

அதிக விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக ஒட்டுமொத்த மக்களும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். எனவே இவ்விடயத்தை தேசிய பிரச்சினையாகக் கருத்திற்கொண்டு இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்.

கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெயை மானிய விலையில் வழங்குவதாக கடந்த ஜூலை மாதம் வாக்குறுதியளிக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருக்கும்போது இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

எனினும் இதுவரை கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெயானது மானிய விலையில் வழங்கப்படவில்லை. கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமதாக இருந்த காலத்தில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்று அரசாங்கத்தை கேட்கின்றோம்.

Recommended For You

About the Author: admin