ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை தொடர்பில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து விசாரிக்கவும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
அண்மையில் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இதனையடுத்து அந்நாட்டிலிருந்து பலரும் வெளியேறி வரும் நிலையில், அங்கு பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
எவ்வாறாயினும், தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஹமீத் கர்சாய் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.