முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த அதே அமைச்சரவை ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திலும் தொடரக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அரசாங்கம், கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த முறை நியமிக்கப்பட்டதாக காணப்படுகின்றது.
அந்த அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் பொதுஜன பெரமுனவின் கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், அவர்களை பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களாக கருதக்கூடாது என அந்தக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுஜன பெரமுனவின் ஆலோசனைகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய அமைச்சரவையை ஸ்தாபிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் ஊடாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பெரமுன கட்சியினால் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட முறுகல் நிலையே இதற்கு பிரதான காரணமாகும்.
பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தம் காரணமாக, விரைவில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடும் எண்ணத்தில் ஜனாதிபதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.