இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனுதவியில் 50 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் தற்போது வரையில் பயன்படுத்தவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் கடனுதவியில் இருந்து மருத்துவத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 110 மில்லியன் டொலர்களில் 50 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தவில்லை எனவும் சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் தற்போது வரையில் சுமார் 60 மில்லியன் டொலர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா உறுதிபடுத்தியுள்ளார்.
அமைச்சின் கீழ் இயங்காத சில நிறுவனங்களுக்கு டெண்டர்களை விடுவிப்பதில் உள்ள சிக்கலான செயல்முறை குறித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட இந்திய கடன் தொகையை அரச மருந்துப் பொருட்கள் உற்பத்தி கூட்டுத்தாபனம் (SPMC),அரச மருந்து கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் தனியார் துறை உள்ளிட்ட அமைச்சுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே விநியோகிக்க முடியும்.
சில டெண்டர்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் தேவையான மருத்துவ உபகரணங்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.