மட்டக்களப்பு- கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மின்னல் தாக்கிய நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முகத்துவாரம் பகுதியில் நேற்றுமுன் தினம் மாலை மின்னல் தாக்கி மூன்று கடற்றொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் கடற்றொழிலாளர் ஒருவர் காணாமல்போயிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கடும் மழைபெய்து வருகின்றது.
இந்த நிலையில் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களை மின்னல் தாக்கியுள்ளது.
இதன்போது காணாமல்போன கடற்றொழிலாளர் திராய்மடு மூன்று பிள்ளைகளின் தந்தையான 54வயதுடைய உம்முனி விஜயகுமார் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
காணாமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் நேற்றுமுன் தினம் மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
இதேநேரம் இந்த மின்னல் தாக்கம் மற்றும் கடுமையான மழை காரணமாக முகத்துவாரத்தின் ஆற்றுவாய் இயற்கையாகவே திறந்து கடலுக்குள் வெள்ளநீர் செல்லும் நிலையேற்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.