திருகோணமலை சம்பூர் ஆலங்குளத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 இற்கு பொதுச்சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வுக்கென இயங்கிவரும் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் நேர்த்தியாக மீள்வடிவமைக்கப்பட்ட துயிலுமில்லம் அஞ்சலிக்காக தயார் செய்யப்பட்ட நிலையில் மாலை 6.00மணியளவில் இரண்டாயிரத்துக்கும் அதிமான மக்கள் புடைசூழ விடுதலைப்போராட்டத்தில் முதல் வித்தான லெப் சங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த நேரமாகிய மாலை 6.05இற்கு நினைவொலி எழுப்பப்பட அகவணக்கம் செலுத்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து வடபோர்முனைக்கட்டளைத் தளபதிகளுள் ஒருவராக இருந்து ஆனந்தபுரச்சமரில் வீரகாவிமான லெப்.கேணல் பிரபு அவர்களின் மகள்கள் இருவர் பொதுச்சுடரினை ஏற்ற அனைத்துக் கல்லறைகளுக்கும் முன்னால் திரண்டிருந்த மாவீரர்களின் பெற்றோர்கள் நினைவுச் சுடர்களை ஏற்றித் தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த இரண்டு வருடங்களாக தடைசெய்யப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு இம்முறை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சம்பூர் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்ததுடன் பயங்கரவாதத்தடைச் சட்ட ஏற்பாடுகளை மீறாத வகையில் நினைவேந்தலை முன்னெடுக்கவும் ஆலோசனை வழங்கியிருந்தனர்.