இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதன் காரணமாக, 153,375 கிலோகிராம் பால் மாவைக் கொண்ட ஆறு கொள்கலன்கள் இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (29.11.2022) உரையாற்றும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
பால் மாவுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்தில் இருந்து மலேசியா ஊடாக இலங்கைக்கு முழு ஆடை பால் மா இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு நாயகத்தின் அனுமதி தேவைப்படாத காரணத்தினால், திறந்த கணக்கு முறையின் கீழ் இந்த பால் மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், சொக்லேட் மற்றும் பால் தேநீர் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாக இறக்குமதியாளர், இந்த மாவை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆறு கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.