யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு திருட வந்த இளைஞர்களை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு 08 ஆம் வட்டாரப்பகுதியில் நேற்று காலை வீடு உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 இளைஞர்களை வீட்டு உரிமையாளர்கள் கண்டு சத்தமிட்ட வேளை திருட முற்பட்ட 5 இளைஞர்களும் வீட்டில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கிராம மக்கள் தேடுதல் நடத்தியபோது மூன்று திருடர்கள் மந்துவில் பகுதியில் வைத்து இளைஞர்களால் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய இரண்டு திருடர்களும் பின்னர் பிரதேச இளைஞர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கத்தி,கோடாலி போன்ற கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம், சங்கானை, இரணைப்பாலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட திருடர்களை வீதியில் இழுத்து வைத்து நையப்புடைப்பு செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.