மட்டு வவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட இரு பொலிசாரின் 4ம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில்  சுட்டு கொலை செய்யப்பட்ட இரு பொலிசாரின் 4 ஆண்டு நினைவேந்தலையிட்டு அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி நேற்று புதன்கிழமை (30) இரவு  பொலிஸ் நிலையத்தில் அவர்களின் திருவுருவ படத்திற்கு பொலிசார் சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அனுஷ்டித்தனர்.

கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ம் திகதி  வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான கணேஸ் தினேஸ், நிரோசன் இந்திக பிரசன்ன ஆகிய இருவரையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஸாரானின் குழுவினரால் முதல் முதலில் கத்தியால் குத்தியும்  துப்பாக்கியாலும் சுட்டு கொலை செய்யப்பட்டு அவர்களின் துப்பாக்கிகளை அபகரித்து சென்றனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட இரு பொலிசாரின் 4ம் ஆண்டு நினைவேந்தலையிட்டு வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தலைமையில் உயிரிழந்தவர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்தனர்.

இதில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசார் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட இரு பொலிசாரின் திருவுருவ படத்திற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி மற்றும் பொலிசார் மலர் தூவி சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக வீதியால் பிரயாணம் செய்தவர்களை மறித்து தாகசாந்தியாக பிஸ்கட் மற்றும் தேனீர் வழங்கிவைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews