மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும், இல்லை என்றால் பணத்தை அச்சடிக்க வேண்டும் அல்லது வெட் வரியை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஆகஸ்ட் மாதம் மின்கட்டணத்தை உயர்த்தினோம், அது போதாது. 151 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 2013 முதல் நமது மொத்த இழப்பு 300 பில்லியன். 300 பில்லியன் வருமானத்தை ஏற்படுத்த வேண்டும்.
அடுத்த ஆண்டு வறட்சி ஏற்பட்டால் 420 பில்லியன் ரூபா தேவை. மழை பெய்தால் 352 பில்லியன் தேவைப்படும். அதிக மழை பெய்தால் 295 பில்லியன் ரூபாவே தேவைப்படும். இந்த பணத்தை எவ்வாறு ஈட்டிக் கொள்வது?
அரசாங்கத்திற்கு வருமானம் இல்லை. பணத்தை அச்சிடமுடியுமா? அப்படி பணத்தை அச்சிட்டால் ரூபாய் மதிப்பு குறைகிறது. எனவே வெட் வரியை அதிகரிப்போம். வெட் வரியை அதிகரித்த பிறகு, அது ஒரு பிரச்சினையாக மாறும்.
மூன்றாவதாக கட்டணத்தை உயர்த்த வேண்டும் இல்லையெனில் மின்சாரம் தடைப்படலாம். எனக்கு அது பிடிக்கவில்லை. இதை நாம் தயக்கத்துடன் செய்ய வேண்டும். மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்க வேண்டும். அதனால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
கடந்த 2013ம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அனைவரும் இதனை பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.