திருகோணமலை- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அதிகஷ்ர பிரதேசங்களை உள்ளடக்கிய இலவச ஆயுள் வேத வைத்திய முகாம் நீனாக்கேணி கிராமத்தில் உள்ள சிவனருள் இளந்தளிர் இலவச கல்வி நிலையத்தில் நேற்று (2022.12.08) வியாழக்கிழமை இடம்பெற்றது.
திருகோணமலை கப்பல்துறை தள வைத்தியசாலையின் அனுசரணையில் சிவனருள் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் நேற்று காலை 9:30 மணி முதல் 3:30 மணி வரை குறித்த ஆயுள் வேத வைத்திய முகாமானது இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களான நீனாக்கேணி, நல்லூர், பாட்டாளிபுரம், இளக்கந்தை, வீரமாநகர் மற்றும் உப்பூறல் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களின் நன்மை கருதி சிவனருள் பவுண்டேஷன் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க இடம்பெற்ற வைத்திய முகாமில் கப்பல்துறை தள வைத்தியசாலை மருத்துவர்களான சுகாயினி தமிழரசி பத்மாங்கினி பீரிஸ் மற்றும் பயிற்சி வைத்தியர் ஹயக்கிரீவன் ஆயோருடன் தாதிய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு ஆயுள் வேத மருந்துகள் மற்றும் இயற்கை உணவுகளின் முக்கியத்துவம், ஆயுள் வேத மருத்துவ துறையின் நன்மைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் கிராம மக்களின் நோய்களை இனங்கண்டு ஆயுள் வேத மருந்துகள் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
இதன்போது கலந்துகொண்ட பொது மக்கள் தாம் நோய்கள் ஏற்படும் போது 25 கிலோ மீற்றருக்கும் அதிக தூரத்தில் உள்ள மூதூர் தள வைத்தியசாலைக்கே சென்று மருந்து எடுக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் இவ்வாறான இலவச வைத்திய முகாம்களை ஏற்படுத்தி தந்தமையால் மிகவும் நன்மையாக உள்ளதாகவும் தொடர்ந்தும் இவ்வாறான வைத்திய முகாங்களை நடத்த உதவ வேண்டும் என்றும் தெரிவித்தனர்.