வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பரப்பில் உருவான தாழமுக்கமானது மண்டோஸ் புயலாக மாறி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்வால் தமிழகத்தின் வடக்கு, பாண்டிச்சேரி, ஆந்திரப் பிரதேச தென் பகுதி ஊடாக 9ம் திகதி இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
“குறித்த காலப்பகுதியில் மழைவீழ்ச்சியானது 100 மில்லிமீட்டருக்கு அதிகமாக கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதுடன் கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.
மேலும், இந்தவேளையில் கடல் அலையின் உயரமானது 2.5 மீட்டருக்கும் 3.5 மீட்டருக்கும் இடைப்பட்டதாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே கடற்றொழிலுக்கு செல்வோர் குறித்த காலப்பகுதியில் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காற்றின் வேகமானது மணிக்கு 70 தொடக்கம் 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதுடன் இத 100 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் கரையோரப்பகுதி மக்கள் மிகவும் அவதாரமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” என்றார்.
அத்துடன், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மண்டோஸ் புயலானது மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில் காலையில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கப்பட்டுள்ள மழைவீழ்ச்சி மற்றும் காற்று காரணமாக ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் பனையானது வீட்டிற்கு மேலே விழீந்ததால் வீடானது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தத்தினால் வீட்டில் உள்ள மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.