போதைப்பொருட்களுடன் சுற்றுலா சென்ற 10 பேர் ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்களுடன் ஹட்டன் ஊடாக நுவரெலியா மற்றும் சிவனொளிபாத மலை தரிசிக்க சென்ற 10 பேரை ஹட்டன் கோட்ட புலனாய்வு பிரிவு, ஹட்டன் பொலிஸார் மற்றும் விசேட குற்றத்தடுப்புப்பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இணைந்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் அவர்களி்டம் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களுடன், ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் பாவணையினை தடுக்கும் முகமாக பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 09 ம் திகதி ஹட்டன் கோட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித த அல்விஸ்னின் ஆலோசனைக்கமைய கோட்ட புலனாய்வு பிரிவின் பிரதான பரிசோதகர் பிரேமலாலின் தலைமையில் ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் ஸ்டூவட் 1318 என்ற மோப்ப நாயினை பயன்படுத்தி கினகத்தேனை தியகல பகுதியில் சுற்றுலா பயணிகள் பயணஞ் செய்த பேருந்துகள், வான்கள் போன்றனவற்றில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சுற்றுலா சென்ற பத்து பேரிடமிருந்து கேரள கஞ்சா ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் நுவரெலியா பிரதேசத்திற்கும் சிவனொளிபாத மலை யாத்திரை செய்வதற்காக வந்தவர்கள் என்றும். இவர்கள் குருணாகல் கம்பகஹ, வரக்காபொல உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதே நேரம் போதைப்பொருள் பாவணையினை தடுப்பதற்காக ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு விரிவினர் புகையிரதங்களில் சுற்றுலா வருபவர்களையும் சோதனையிட விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.