வைத்தியசாலைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வைத்தியர்கள்

அரசாங்கத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ள சில மருத்துவர்கள் மருந்து வகைகளை முறைகேடாக பயன்படுத்தி இளைஞர் யுவதிகளுக்கு போதைப்பொருளுடன் கூடிய மருந்துகளை விற்பனை செய்வது தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பிரதான மருந்து கட்டுப்பாட்டாளர் அமித பெரேரா தெரிவித்தார்.

சமூகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் போதையுடன் கூடிய மருந்துகளை போதைவஸ்தாக பயன்படுத்துவதாக இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுவர்கள் மத்தியில் பரவிவரும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் விடயத்தில் சில நிறுவனங்களுக்கு நேரடிப் பொறுப்பு காணப்படுகின்றன போதிலும் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினையில் அனைவருக்கும் பொறுப்பு இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தற்போது அதிகரித்திருப்பதாக அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சிறுவர்கள் ஏனைய சிறுவர்களையும் விட ஒப்பீட்டளவில் வதைகளுக்கும் நோய்களுக்கும் உள்ளாகும் போக்கு அதிகரித்துள்ளது.

போதைப் பொருள் காரணமாக ஒரு சிறுவனின் மனநலம் பாதிக்கப்பட்டால் அதற்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தயார் என்று அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews