எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முன்னறிவிப்பு இன்றி மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று(18.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்சீவ இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலுதம் தெரிவிக்கையில்,குறித்த அமைச்சரவை பத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 30 மின்சார அலகுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர் 3000 ரூபாவை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்தது போன்று, இன்று அமைச்சரவை கூட்டத்தில் அவ்வாறான பிரேரணை சமர்ப்பிக்கப்படமாட்டாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை, ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பெரும்பாலும் ஜனவரி மாத நடுப்பகுதியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் அளிக்கும் முன்மொழிவுகள் இதில் உள்ள போதிலும், ஒரு மின்சார அலகு குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.