முன்னணியின் சதிவலையில் சிக்கிய, எனக்காக வேலை செய்த நகரசபை உறுப்பினரல்லாத ஒருவரே என்னை தோற்கடிக்க செயற்பட்டார்…! ஜோ.இருதயராசா

தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினரின் சதிவலையில் சிக்கி எமது கட்சியைச்சார்ந்த என்னோடு இருந்து எனக்காகவே வேலை செய்த நகரசபை உறுப்பினரல்லாத ஒருவரே என்னை தோற்கடிக்க முழுமையாக செயற்பட்டார் என முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோசப் இருதயராசா தெரிவித்துள்ளார்.

இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்ஒஇன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது

 

முதலில் தவிசாளர் பதவியில் பணி செய்ய வாய்ப்பளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்கும், தமிழரசுக் கட்சிக்கும், இதுவரை எனக்கு இப்பணியைச் செய்ய ஆதரவளித்த நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள்,
ஊழியர்கள், பொதுமக்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

15 உறுப்பினர்களைக் கொண்ட பருத்தித்துறை நகரசபையில் 05
உறுப்பினர்களை (நான் உட்பட) கொண்ட எங்கள் கட்சி அணியை தலைமைதாங்கி சபையை
பொறுப்பெடுத்து, தனித்து எண்ணிக்கை பலம் அற்ற குழுவாக இருந்தும் பெரும் சிரமங்கள்,
சவால்களைக் கடந்து இதுவரை சிறப்பாக சபையின் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளேன்.

இதற்கு எமது கட்சி அங்கத்தவர்கள் மட்டுமல்ல சில மாற்றுக் கட்சி, மற்றும் சுயேட்சை குழு
உறுப்பினர்களின் ஆதரவு முக்கியமானது என்பதை நான் குறிப்படாது புரிந்து கொள்வீர்கள்.
இதுவரை இவர்கள் காட்டிய ஒத்துழைப்புக்கு எனது நேர்மையானதும், அனைவரையும் அணைத்து நகர அபிவிருத்தியில் அக்கறையுடனும் செயற்பட்டமையே காரணமாகும்.

நகரசபையின்
கண்ணியத்துக்கும், கௌரவத்திற்கும் குந்தகம் ஏற்படாதவகையில் நேர்மையான, ஒழுக்கமான தவிசாளராகவே இறுதிவரை இருந்துள்ளேன்.
இந்த “நகரசபை” கலைக்கப்பட இன்னும் சிறிதுகாலமே இருக்கின்ற நிலையில், உள்ளூராட்சி
சபைகள் அனைத்தும் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதைக்குறிவைத்து 2023
ஆம் ஆண்டிற்கான “பாதீட்டை” தோல்வியுறச்செய்து தமக்கான விளம்பரத்தை சிலர் அரசியல்
உள்நோக்குடன் முன்னெடுத்து மலிவான அரசியல் செய்ய முனைகின்றனர். இதற்கு எமது கட்சி
(தமிழரசுக்கட்சி) உறுப்பினர் ஒருவரும் “கோடரிக்காம்பாக” அமைந்தது துர்ப்பாக்கியமானது.

சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் நகர அபிவிருத்திக்கான சிறப்பான அம்சங்களைக்
கொண்டிருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்ற நிலையில் தனது சுயநல, காழ்ப்புணர்வு காரணமாக இதனை எதிர்த்த ஒரேயொரு கட்சி உறுப்பினரின் அந்தச் செயற்பாட்டை நகர மக்களுடன் சேர்ந்து நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதற்தடவை சமர்ப்பிக்கப்பட்டபோது தமது எதிர்மறையான நிலைப்பாடு பற்றி எனக்கோ, கட்சிக்கோ எதுவும் தெரியப்படுத்தாது அதனைத் தோற்கடித்து நகர மக்களுக்குத் துரோகம் இழைத்தமை
எவ்வகையிலேனும் நியாயப்படுத்தப்பட முடியாதவொன்று.

இரண்டாவது தடவையாக பாதீடு சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் தமிழ்த்தேசிய மக்கள்
முன்னணியினரின் சதிவலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இன்னுமொரு உறுப்பினர்
சிக்கி பதவி மோகத்தில் பாதீட்டை எதிர்த்து என்னை பதவியிழக்க நினைத்திருந்தார்.

இது இன்று
வீணாகிப் போய்விட்டது.
இரண்டாம் முறை திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது எமது கட்சியினர் ஆதரவாக
வாக்களிப்பார்கள் என்ற உறுதிமொழி கட்சியின் தலைமைப்பீடத்தால் எனக்கு வழங்கப்பட்டு
அதற்கமைவாக நான் திகதி குறித்து கூட்டத்திற்கான ஒழுங்குகளை மேற்கொண்டேன். எனினும் அந்த
உறுப்பினர் வழமை போல சொல்லொன்று செயலொன்றான தனது நிலைப்பாட்டிலிருந்து
மாறவில்லை. எதிர்த்து வாக்களிக்க எமது கட்சிக்குள்ளேயே உறுப்பினர்களை ஒன்று சேர்த்து
கட்சிக்கும், தலைமைக்கும் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கும், துரோகம் இழைத்து பருத்தித்துறை
நகருக்கு வரலாற்றுக் களங்கத்தை ஏற்படுத்த காத்திருந்தார்.

தவிசாளர் பதவியினை இராஜினாமா செய்யும் வரை நான் மக்களுக்கும், கட்சிக்கும் மிக
விசுவாசமாகவும், நேர்மையாகவும் நடந்திருக்கிறேன் என கட்சித் தலைமைக்கும் நன்கு தெரியும்.
அப்படி இருந்தபோதும் நகர மக்கள் பற்றியோ, கட்சித் தலைமை பற்றியோ சிந்திக்காது மாற்றுக் கட்சியினரின் வஞ்சக வலையில் விழுந்து நன்மைகள் பெற்று இந்த வரவு-செலவுத் திட்டத்தைத் முதற்தடவை தோற்கடித்தும், இரண்டாம் முறை தோற்கடிக்கப்பட முயற்சித்தும், துரோகஞ செய்தமைக்கு உடந்தையாக இருந்த இந்த உறுப்பினர் உட்பட்ட அனைவரும் இந்த நாசகாரச் செயலுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

எனது தவிசாளர் பதவிக்கான கொடுப்பனவை தவிசாளர் பதவிக்கு வந்தகாலந் தொடக்கம் கொராணா
தொற்றுநோய் நிலைமையால் பாடசாலைகள் இயங்காத காலம் வரை வலயக்கல்வி அலுவலக
அபிவிருத்திக்குழுவின் ஊடாக நகரசபைக்குட்பட்ட 50 பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் கல்வி
உதவிக்காக வழங்கியிருந்தேன். இன்றும் சில மாணவர்களுக்கு கல்விக்கான உதவி
செய்துகொண்டிருக்கிறேன்.
இரண்டு வருடங்களுக்கு பின்பு கட்சியின் தலைமையிடம் நான் எனது இராஜினாமாவினை செல்லியபோது கட்சித்தலைமையும், கட்சி ஆதரவாளர்களும் இராஜினாமா
செய்யவேண்டாமென என்னை வலியுறுத்தியிருந்தார்கள். அடுத்த வருடம் எனது சுகயீனம் காரணமாக
வைத்தியசாலையில் இருந்தபோதும் இதே வேண்டுகோளை நான் விடுத்திருந்தபோதும் கூட அதற்கும்
சம்மதம் தெரிவிக்காமல் மறுத்துவிட்டார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பும் நான் கேட்டபோதும், அதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இப்பொழுதும் எனது இராஜினாமாவை தலைமை
விரும்பவேயில்லை.

இறுதியாக, மக்களின் நலனை முன்நிறுத்தாது இழிநிலை செல்லும் இத்தகைய நபர்களை தேர்தலில்
முன் நிறுத்துவதைத் இனிமேலாவது தவிர்க்கவேண்டும் என எமது கட்சியை மட்டுமல்ல அனைத்துக்
கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

இதேவளை நீங்கள் திடீரென இராஜினாமா செய்வதற்குரிய காரணம் என்ன? என கேட்கப்பட்டதற்க்கு
கட்சி தலைமையினரின் வேண்டுகோளுக்கமைய 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டினை
19.12.2022ஆந்திகதி 2வது தடவையாக சபையில் சமர்ப்பிப்பதற்கு ஆயத்தமாயிருந்தேன். என்னை
பதவியிலிருந்து தோற்கடிப்பதற்கு தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினரின் சதிவலையில் சிக்கி எமது கட்சியைச்சார்ந்த என்னோடு இருந்து எனக்காகவே வேலை செய்த நகரசபை உறுப்பினரல்லாத ஒருவர் 18ஆம் திகதி மாலையில் எமது உறுப்பினர் ஒருவரிடம் சென்று
பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கும்படி பணித்த செய்தி எனக்கு கிடைத்த பொழுது அதை நான்
நம்பவில்லை. ஆனால் அன்றைய இரவு எமது கட்சியைச்சார்ந்த அந்த நபர் எனது விசுவாசத்துக்குரிய எமது கட்சி உறுப்பினர் ஒருவரிடம் சென்று ஏற்கனவே முதலாவது பாதீடு தோற்பதற்கு காரணமாக
இருந்த எங்கள் கட்சி உறுப்பனரோடு சேர்ந்து, பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கும்படி அவரை
வற்புறுத்தியுள்ளார்;.

அவர் மறுத்த பொழுதும்; அவரிடம் கண்டிப்பாக சொல்லி சென்றுள்ளார்; அந்த உறுப்பினர் உடனடியாக என்னை அழைத்து இதை சொல்லியபொழுது கட்சியின் நலனை நினையாது என்னை தோற்கடிப்பதனையே முதன்மையாகக்கொண்டு இவர்கள் செயற்படுகிறார்கள் என்ற எண்ணம் எனது மனதில் தோன்றியதோடு மாலையில் நான் கேள்விப்பட்ட செய்தியில் உண்மை இருப்பதாக நம்ப
முடிந்தது. மேலும் 1வது தடவை பாதீட்டிற்கு ஆதரவாக வாக்களித்த பிற கட்சியின் இரு உறுப்பினர்களின் வீடுகளிற்கு சென்று எனக்கு எதிராக வாக்களிக்கும் படி கூறியதாகவும் கூட
காலையில் அவர்கள் வாயிலாக அறிய முடிந்தது. சபையின் உறுப்பினரல்லாத எமது கட்சியைச் சார்ந்தவர் எனக்கெதிராக கூட்டம் சேர்த்து பாதீட்டைத் தோற்கடித்து ஆட்சியை வீழ்த்துவதற்கு சதி
செய்தார்.

எமது கட்சியின் நலன்சார்ந்து இவர்களது சதி வலையினை முறியடிப்பதற்காகவே எனது
சுயவிருப்பின்பேரில் இராஜினாமா முடிவை திடீரென அறிவிக்கவேண்டி ஏற்பட்டது என்றார்.

மேலும் பாதீடு தோற்கடிக்கப்பட்டது ஏன்? என கேட்டபோது
முதலாவது தடவை பாதீடு சமர்ப்பிக்கும்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி)
உறுப்பினர் ஒருவருக்கு ஏற்பட்ட தவிசாளராக ஆகவேண்டுமென்ற விபரீத பதவி ஆசைதான்
முதற்காரணமாக நான் கருதுகிறேன்.

இதனால் பிற கட்சி உறுப்பினர்கள் பாதீட்டிற்கு ஆதரவாக வாக்களித்த போதும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் இணைந்து பாதீட்டிற்கு எதிராக
வாக்களித்த காரணத்தினாலும் இவருடைய ஒரேயொரு எதிரான வாக்கினாலும் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. குறித்த உறுப்பினருக்கு எதிராக கட்சித் தலைமையும் விளக்கம் கோரி நடவடிக்கை எடுத்துள்ளமையும் இங்கே
குறிப்பிடத்தக்கது என்றார்.

மேலும் உங்களுக்கு உங்கள் கட்சிக்காரரிடமிருந்து அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டதா? என கேட்டபோது

கட்சியின் தலைமைகள் எனது இராஜினாமாவிற்காக எனக்கு எதுவித அழுத்தங்களும் பிரயோகிக்கவில்லை. கட்சி உறுப்பினர் ஒருவர் எதிராக வாக்களித்து பாதீடு முதலாவது முறை தோற்கடிக்கப்பட்டதும்,
இதுபற்றி கட்சி தலைமைக்கு நான் அறிவித்த பின்னர் கட்சியினால் தகுந்த நடவடிக்கை எடுக்க
தாமதமானதால் கட்சிக்கு சங்கடம் தராது நான் தவிசாளர் பதவியில் இருந்து விலக எண்ணியிருந்தேன்.

ஆனால் கட்சியின் தலைமை இது விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு கலந்து பேசி இரண்டாவது தடவை பாதீட்டிற்கு ஏற்கனவே எதிர்த்த உறுப்பினர் ஆதரவு தருவார் என கூறியதால் நான் பதவி
விலகுவதை தவிர்த்து இரண்டாவது பாதீடு சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

ஆனால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் ஆதரவுதரும் மனநிலையில் இல்லை என்பது மட்டுமல்ல. அவருடன் இணைந்து கட்சியின் உள்ளூர் ஆதரவாளர் ஒருவர்; என்னை பாதீடு சமர்ப்பித்த அடுத்த நாள் இராஜினாமா செய்யுமாறு கேட்டிருந்தார். பின்னர் அடுத்த நாள் காலையில் அதனை முன்கூட்டியே எழுத்தில் தமக்கு தருமாறு குறித்த உறுப்பினர்
தன்னிடம் வலியுறுத்தினார். அதன்படி இராஜினாமாக்கடிதத்தினை
ஒப்பமிட்டு முன்னரே தம்மிடம் தருமாறும் தெரிவித்திருந்தார்.

கட்சிக்கு எதிராக செயற்பட்டு
கட்சியினால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஒருவர் தவிசாளராகிய என்னை
இராஜினாமா கடிதத்தினை முன்னரே ஒப்பமிட்டு தரும்படி கேட்டு, அதனை வழங்கும் இழி நிலைக்கு நான் செல்ல விரும்பவில்லை. அது முறையான செயலுமல்ல. ஏற்கனவே குறிப்பட்டது போல் எனக்கு ஆதரவு தரவிருந்த சபை உறுப்பினர்களிடம் இரவோடிரவாக வீடுவீடாகச் சென்று எனக்கு எதிராக
வாக்களிக்குமாறும் இவர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்றார்.

மேலும் இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? என கேட்டபோது

முதற்தடவை எவருக்கும் அறிவியாது பாதீட்டை எதிர்த்து வாக்களித்து அது தோற்கடிக்கப்படக்
காரணமாயிருந்தவர் முதலாவதாகப் பொறுப்புக்கூற வைக்கப்படவேண்டியவர். அதுதான் சபை
முடக்கப்படுவதற்கான ஆரம்பப் புள்ளி. அடுத்து இரண்டாம் தோற்கடிக்கப்படுவதற்காக எமது கடசி
உறுப்பினர் இருவருடனும் உறுப்பினர் அல்லாத கட்சி ஆதரவாளர் ஒருவருடனும் கூட்டுச் சதி செய்த
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் (காங்கிரஸ் கட்சி) தான் இந்தச் சபை நடவடிக்கை முடக்கத்திற்குக்
காரணமானவர்கள்.
இவர்கள் தம்மைத் தெரிவு செய்த வாக்காளர்களுக்கும், பருத்தித்துறை நகரசபையின் நற்பெயருக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews