சிறையிலுள்ள 16 அரசியல் கைதிகளின் வழக்கை விரைவாக நிறைவு செய்ய நீதி அமைச்சர் வலியுறுத்து

சிறையிலுள்ள 16 அரசியல் கைதிகளின் வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், பாரதூரமான – உணர்வுபூர்வ குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையோர் என கூறப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு சிலரே சிறையில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது அமைச்சில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். ‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் போராளிகளை சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் உள்ள 8 போராளிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களின் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரின் வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து, அவற்றை நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன். தலதா மாளிகை, மத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த போது அவரையும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறைகளில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வதாயின் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து ஆலோசனை கோரப்படவேண்டும். இவ்விடயம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது’ என விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews