பொரள்ளை கன்னங்கர வீதியில் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கொள்ளையிட்டு, அதன் பாகங்களை விற்று ஹெரேயின் போதைப் பொருளை பயன்படுத்திய, கொழும்பு மாநகர சபையின் வாகன தரிப்பிடத்திற்கு பொறுப்பான அனுமதி சீட்டுக்களை விற்பனை செய்யும் நபர் உட்பட இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர். பொரள்ளை மற்றும் மெகசீன் பகுதிகளில் வசிக்கும் 37 மற்றும் 36 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பொரள்ளை கன்னங்கர வீதியில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை இரண்டு நாட்களுக்கு முன்னர் கொள்ளையிட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நடத்திய விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வழங்கிய தகவலுக்கு அமைய கொள்ளையிடப்பட்ட முச்சக்கர வண்டி மருதானை பிரதேசத்தில் பாழடைந்த வீட்டுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியின் பாகங்களை கழற்றி விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் ஹெரோயினை கொள்வனவு செய்துக்கொண்டிருந்த போது மற்றைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.