இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில்,போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருள் பாவனையால் கிட்டத்தட்ட 40,000 பேர் உயிரிழப்பதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவர் ஷாக்ய நானாயக்கார தெரிவிக்கையில்,
குழந்தைகளை குறிவைப்பது இவ்வுலகில் புதிதல்ல. இலங்கையில் போதைப்பொருள் மற்றும் மது பாவனையால் வருடாந்தம் 40,000 பேர் இறப்பதை நாம் அறிவோம்.மது, கஞ்சா, என்பனவற்றினை பயன்டுத்தும் போது மகிழ்ச்சியாகவும், சுகமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும், ஆனால் இவை மிகவும் ஆபத்தானவை.
சிறுவர்கள் மத்தியில் இந்த நச்சு மருந்துகளின் அச்சுறுத்தல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாணவர்கள் வீட்டில் பணம் கேட்டால் கவனமாக இருக்குமாறும், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எந்த நேரமும் விழிப்புடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மாணவர்களின் உடல் மாற்றங்கள் தொடர்பில் பெற்றோர் தினமும் அவதானிக்க வேண்டும்.போதைப்பொருள் பாவனையினால் மாணவர்களின் உடலில் உடனே மாற்றங்கள் ஏற்படாது.சிறிது காலம் செல்லும்,தங்களது பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் கைகளிலேயே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து “மாவா” போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவரும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.