காலி, ஹிக்கடுவை, பத்தேகம நகரங்களில் உள்ள மக்கள் வங்கியின் பணம் மீளப்பெறல் கணனி இயந்திர கட்டமைப்பை உடைத்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையிட்ட வெளிநாட்டவர்கள் சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த பணம் மீளப்பெறல் இயந்திரங்களில் ஒன்றில் 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாவும் மற்றுமொரு இயந்திரத்தில் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவும் மேலும் ஒரு இயந்திரத்தில் 57 லட்சம் ரூபாவும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான முறைப்பாடுகள் காலி, ஹிக்கடுவை மற்றும் பத்தேகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த முறைப்பாடுகளின் ஊடாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பணம் மீளப்பெறல் இயந்திரங்கள் இருக்கும் இடங்களுக்குள் நேற்று அதிகாலையில் புகுந்துள்ள வெளிநாட்டவர்களை கொண்ட குழு, அங்கு பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கெமராவில் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டு விட்டு, பணம் மீளப்பெறல் இயந்திரத்தின் மென்பொருளுக்குள் பிரவேசித்து, அவற்றின் தரவுகளை மாற்றி பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
மூன்று நகரங்களில் உள்ள பணம் மீளப்பெறல் இயந்திரங்களில் ஒரே விதமாக கொள்ளையிட்டுள்ளமை விசேட அம்சம் என பொலிஸார் கூறியுள்ளனர். இதனால், வெளிநாட்டவர்களான ஒரே குழுவினரே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய காலி, ஹிக்கடுவை மற்றும் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு வெளிநாட்டவர்கள் கொழும்பு நாராஹென்பிட்டி பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றின் பணம் மீளப்பெற இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயற்சித்தமை தொடர்பான தகவல் வெளியாகி இருந்தது