(சி.அ.யோதிலிங்கம்.)
நீதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஒரு லிபரல் முகத்தை
கொடுப்பதற்காகத்தான் களம் இறக்கப்பட்டார் என்பது அரசியல் அவதானிகளின் வாதமாக இருந்தது.
அவரும் பதவிக்கு வந்தவுடன் முழுமையான வீச்சுடன் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினார்.
கட்டம் கட்டமாகவே செயற்பாடுகளை முன்னெடுத்தார். முதலாவது கட்டத்தில் அரசுடன் முரண்பட்டு நின்ற
அமெரிக்க தலமையிலான மேற்குலகத்தையும் இந்தியாவையும் திருப்திப்படுத்த முனைந்தார். இதற்காக
ஒரே நாளிலேயே அமெரிக்கத்தூதுவர், இந்தியத் தூதுவர், சீனத் தூதுவர், ஜேர்மனிய தூதுவர், ரஷ்யத் தூதுவர் என்போரைச்சந்தித்து நெகிழ்ச்சியான உரையாடலை மேற்கொண்டார்.
குறிப்பாக அமெரிக்கா தலமையிலான மேற்குலகத்திற்கும் இந்தியாவிற்கும் வலுவான வாக்குறுதிகளை வழங்கினார்.இவர் இரண்டாவது கட்டத்தில் உள்நாட்டில் அரசிற்கு நெருக்கடியாக இருக்கின்ற விடயங்களை சரி செய்ய முயற்சிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இக்கட்டுரையாளரும் அதற்கான
எதிர்வு கூறலைக் கூறியிருந்தார். அந்தச் செயற்பாடு என்பது ஏனைய இனங்களுக்கு ஒரு நட்புறவு
முகத்தைக் காட்டும் செயற்பாடே ஆகும். கோத்தபாய அரசாங்கம் பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சார்பாக இருக்கின்ற அரசாங்கம், ஒரு இனவாத அரசாங்கம். என்ற பெயர் தான் உள்நாட்டிலும்
வெளி உலகிலும் இருக்கின்றது. இந்த முகத்தோடு சர்வதேச உறவுகளைக் கையாள முடியாது எனவே இதனை
மாற்றி ஏனைய இனங்களோடும் நட்புறவைப் பேணுகின்ற, அனைத்து இனங்கள் மீதும் அக்கறை
உள்ள ஓர் அரசாங்கம் என்ற தோற்றத்தைக் கொடுக்க வேண்டிய தேவையும் அதற்குரிய சூழலை
உருவாக்க வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
அமைச்சரவை மாற்றத்தின் போது முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அமைச்சர் பதவிகளைக்
கொடுத்து முஸ்லீம் மக்களைத் திருப்திப்படுத்தலாம் ஆனால் தமிழ் மக்களை அவ்வாறு திருப்திப்படுத்த முடியாது. அரசியல் தீர்வு தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுப்பதன்
மூலமே அங்கு ஒரு இணக்கச்சூழலையும் நெகிழ்ச்சியான உறவையும் ஏற்படுத்தலாம். இது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும்.தமிழ் மக்களுடன் ஒரு நெகிழ்ச்சியான உறவு இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே கடந்த 4 ஆம் திகதி தமிழத்தேசியக்கூட்டமைப்பினுடைய பேச்சாளர் சுமந்திரன் அமைச்சர் .பீரிசை அமெரிக்கத்தூதுவரின் இல்லத்தில் இராசப்போசன விருந்துடன் சேர்த்து சந்தித்திருக்கின்றார். இந்தச்சந்திப்பு பலத்த வாதப்பிரதிவாதங்களையும்
பரபரப்பையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச்சந்திப்பு
சம்பந்தப்பட்டவர்களினால் முதலில் பகிரங்கப்படுத்தப்படவில்லை இரகசியமாகவே முன்னெடுக்கப்பட்டது. வீரகேசரிப் பத்திரிகையே முதன்முதலில் இதனைப்பகிரங்கப்படுத்தியது. அவ்வாறு பகிரங்கப்படுத்தும் போது பொய்யான தகவல் எனக்கூறியவர்கள் பின்னர் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமான நெருக்கடிகள் உள்ளன. ஒன்று
வரப்போகும் ஜெனீவா கூட்டத் தொடரில் பிரித்தானியா இன்னோர் தீர்மானத்தைக் கொண்டு வர இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இத்தீர்மானம் கடுமையாக இருந்து விடுமோ என்கின்ற அச்சம்
அரசாங்கத்திற்கு உள்ளது. இரண்டாவது அமெரிக்க தலமையிலான மேற்குலகம் இரண்டாவது கட்டத்திற்கு
சென்று விடுமோ என்ற அச்சம் இருக்கின்றது. போர்க்குற்ற விசாரணை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்லாவிட்டாலும் மேற்குலக நாடுகள் தங்கள் தங்கள் நாடுகளில் விசாரணையை நடாத்தக் கூடிய சூழல் உள்ளது. அத்தகைய செயற்பாட்டிற்கு அவை சென்று விடலாம் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
அரசாங்கம் g.l.பீரிஸ் என்கின்ற லிபரல் முகத்தை மட்டுமல்ல அவரோடு சமமமாக
நிற்ககூடிய இன்னோர் லிபரல் முகத்தையும் கண்டு பிடித்திருக்கின்றது. அவர் தான் மிலிந்த மொரகொட ஆவார். அவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள இந்தியத்தூதுவராக அரசாங்கம்
நியமித்துள்ளது. அவரும் இந்தியாவைத்திருப்திப்படுத்த பத்து அம்சங்கள் அடங்கிய ஒரு
வரைபடத்தையும் வரைந்து செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கின்றார்.
மேற்குலகப்பிரச்சினைகளை அமெரிக்க உறவுகளுக்குள்ளால் தணிக்கவும் இந்தியப்பிரச்சினையை
மிலிந்த மொரகொடவின் வரைபடத்திற்குள்ளால் தணிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுமந்திரன் பீரிஸ் சந்திப்பு இச் செயற்பாட்டின் ஒரு பகுதி
தான். மேற்குலகத்திற்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் அவரின் அணுசணையுடன் அவரின் இல்லத்தில் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கம் சந்திப்பிற்கு இனவாதமுகமுள்ள தினேஷ்குணவர்த்தனவை அனுப்பாமல் லிபரல் முகமுள்ள G.L.பீரிசை அனுப்பியமை இங்கு கவனிக்கத்தக்க ஒன்றாகும். இச்சந்திப்பு நிகழப்போகின்ற
பேச்சுவார்த்தைக்கு ஆயத்தப் படுத்துகின்ற ஒரு முதற்கட்ட சந்திப்பு என்றே கூறப்படுகின்றது.
பேச்சுவார்த்தையில் பசில் இராஜபக்ச தலைமையிலான ஒரு குழுவே கலந்து கொள்ள இருப்பதாகச் செய்திகள் வருகின்றது. நிச்சயமாக அந்தக்குழுவில் G.L..பீரிஸ்சும் மிலிந்த மொரகொடவும் அங்கம் வகிப்பார்கள்.இந்தச்சந்திப்புக்கு சுமந்திரன் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளோடு
மட்டுமல்ல தமிழரசு கட்சி மட்டத்தில் கூட எந்தவித கலந்துரையாடலையும் நடத்தாமல் சென்றிருக்கின்றார். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கக் கூட சந்திப்புப்
பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. கடந்த காலத்தில் சுமந்திரன் தனிநபராகத்தான் நகர்வுகளை
முன்னெடுத்திருந்தார். இந்த நகர்வுகள் தமிழ் மக்களுக்கு எந்தப் பயன்களையும் பெற்று கொடுக்கவில்லை. மாறாக அரசாங்கத்திற்கே பல பயன்களை அள்ளிக் கொடுத்தது. ஒரு வகையில்
சுமந்திரன் சர்வதேச நெருக்கடிகளில் இருந்து அரசாங்கத்தைப் பிணை எடுத்தார் எனவும் கூறலாம்.
இந்தத் தடவையும் அவ்வாறு செயற்படப் போகின்றார் என்ற அச்சம் தமிழ் அரசியல் சக்திகளிடம் இருக்கின்றது. சந்திப்புத் தொடர்பான எதிர்ப்புக்கள் இச்சந்தேகத்தில் அடிப்படையில் தான் வெளிவந்திருந்தன.அரசாங்கம் இப்போது ஒரு ஆட்டத்தை ஆடத்துவங்கியுள்ளது. அதன் பிரதான நோக்கம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தன்னைப்பாதுகாப்பது தான். இந்தக் ஆட்டத்தில் தமிழ்த்தரப்பும்
பங்குபற்றித்தான் ஆக வேண்டும். இதனை நிராகரிக்கவும் கூடாது அதே வேளை ஒதுக்கியிருக்கவும்
கூடாது. தமிழ்த்தரப்பு வலுவான ஆயத்தங்களோடு ஒருங்கிணைந்து பங்குபற்றக் கூடிய மார்க்கங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்திற்கு தற்போது ஒரு சர்வதேச
நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்த தமிழ்த்தரப்பு தயங்கக்கூடாது. வரலாறு சந்தர்ப்பங்களை எப்போதும் தருவதில்லை. அரசாங்க தரப்பில் சிறந்த
ஆட்டக்காரர்கள் களம் இறக்கப் படவுள்ளனர். அதற்கு முகம்கொடுக்கக் கூடிய வகையில் தமிழ்த்தரப்பும் வலுவான ஆட்டக்காரர்களை களம் இறக்குதல் வேண்டும். அதற்கான
மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வலுவாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
தமிழ்த்தரப்பைப் பொறுத்தவரை இந்தப் பேச்சுவார்த்தையில் பெரும் நம்பிக்கையோடு
செல்ல வேண்டும் எனக் கூறவரவில்லை. ஆனால் தமிழ் மக்களினுடைய அரசியல் இலக்கினை அடைவதற்கு
ஒரு வலுவான தளமாக இதனைப் பயன்படுத்துதல் வேண்டும்.எதிர் காலத்திலாவது வலுவான அரசியல்
தீர்வு உருவாவதற்கு இவை பயன்படக் கூடியதாக இருக்கும். பேச்சுவார்த்தை என வருகின்றபோது ஒடுக்குதலை மேற்கொண்டவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டத்திற்கு நல்லெண்ணத்தைக் காட்ட முன்வர வேண்டும். இதுவே வழமையானதாகும் எனவே இந்தப்
பேச்சுவார்த்தையில் அரசு முதலில் நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்த்தரப்பு முன்வைப்பது அவசியமானது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10
வருடங்களுக்கு மேலாகின்றபோதும் தமிழ் மக்களினுடைய அபிலாசைகள் குறைந்தளவு கூட
நிறைவேற்றப் படவில்லை. நல்லாட்சி எனக் கூறப்பட்ட ரணில்-மைத்திரி அரசாங்க காலத்திலும்
வினைத்திறன் மிக்க எந்தச் செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக கட்டமைப்புசார் இன அழிப்பு நடவடிக்கைகளே தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் அடிப்படைப்
பிரச்சினை இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோருகின்ற நீதிப்பிரச்சினை, நாள்தோறும் இடம்பெறுகின்ற ஆக்கிரமிப்புப் பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை, காணிப்பறிப்பு
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் போன்ற இயல்புநிலையைக் கொண்டுவருதல்,
போரினால் பாதிக்கப்பட்டவர்களுடைய நலன்களைப் பேணுதல் என்பதை உள்ளடக்கிய அன்றாடப்
பிரச்சினை என ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இதில் முதலாவது இரண்டாவது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு காலம் எடுத்தாலும் அதற்கான
அத்திவாரங்களைப் போடவேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான கால அட்வணையை உருவாக்குவதற்கான
அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். ஏனைய பிரச்சினைகளான ஆக்கிரமிப்புப் பிரச்சினை
இயல்புநிலையைக் கொண்டுவருதல் பிரச்சினை அன்றாடப் பிரச்சினை என்பவற்றை உடனடியாகத் தீர்த்து நல்லெண்ணத்தைக் காட்டுங்கள் என்ற அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். இதன் பின்னர் தான் பேச்சு வார்த்தைக்குச் செல்வது பற்றி தமிழ்த்தரப்பு முடிவுகளை எடுக்கலாம்.
கடந்த காலத்தைப் போல வல்லரசுகளுக்கும் அரசாங்கத்திற்கும் மட்டும் பயன்படக்கூடிய
செயற்பாடுகளை முன்னெடுக்காமல் இந்தத் தடவை கவனமாக இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் ஆதங்கமாக உள்ளது. இவ் விவகாரம் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
தனித்துச் செயற்படுவது ஒருபோதும் ஆரோக்கியமான முடிவுகளைத் தராது. விக்கினேஸ்வரன்
தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியையும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள்
முன்னணியையும் இணைத்து ஒருங்கிணைந்த வகையிலேயே செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை அரசியல் தலைமைகளுக்குக் கொடுப்பதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும்
தயங்கக்கூடாது.