கொழும்பு குதிரை பந்தய திடலில் இளம் பெண்ணை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் யுவதியின் காதலனை பொலிஸார் நேற்று (17) பிற்பகல் கைது செய்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் ஹோமாகம, கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சடலம் கொழும்பு குதிரை பந்தய திடலின் படிக்கட்டில் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதத்தால் வெட்டி இளம் பெண் கொல்லப்பட்டுள்ளதாகவும், கழுத்தின் இருபுறங்களிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளை முடித்துக் கொண்டு நேற்று காலை 11 மணியளவில் தனது காதலனுடன் பேசுவதற்காக குதிரை பந்தய திடல் நோக்கி வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவரது காதலனும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது குறித்த இளைஞன் குதிரை பந்தய திடல் அருகே நடந்து செல்வது அருகில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபரின் காதலன் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு தெற்கிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த மாரப்பனவின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றன. உயிரிழந்த யுவதி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது காதலனிடம் உறவை முறித்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளதுடன், அவர் வேறொருவருக்கு சொந்தமாகி விடுவார் என்று அச்சத்தில் இளைஞன் குறித்த கொலையினை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Previous Article
இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது