க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

நாளை(23.01.2023) ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22.01.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாளை (23.01.2023) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர் மேலதிகமாக 10 நிமிடங்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் இணைந்து பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பரீட்சை ஆணையாளர், “இந்த மேலதிக 10 நிமிடங்கள், 3 மணிநேர கட்டுரை வினாத்தாள்களுக்கு வழங்கப்படுகிறது. பல்தேர்வு வினாக்கள் கொண்ட வினாத்தாள்களுக்கு மேலதிக நேரம் கொடுக்கப்படவில்லை.

பெரும்பாலான நேரங்களில், ஒரு மணிநேர வினாத்தாள் பல் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. அது பல்தேர்வு இல்லை. நீங்கள் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுத வேண்டும்.

அந்த வினாத்தாளிற்கு நீங்கள் முதலில் கேள்விகளை நன்றாக படித்து விடையளியுங்கள்.

பரீட்சையில் கூடுதலாக 10 நிமிடம் கொடுத்துள்ளோம். அதாவது காலை 8.30 மணிக்கு வழங்கப்படும் வினாத்தாளுக்கான, விடைத்தாள் 11.40 இற்கு பெற்றுக்கொள்ளப்படும்.எனவே மொத்தமாக  3 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews