யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சிவில் சமூகத்துடன் இணைந்து முன்னெடுத்த “வடக்கிலிருந்து கிழக்கிற்கு” (N வழ நு) பேரணி வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. பொலீசாரும், புலனாய்வுப் பிரிவினரும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தபோதும் அதனையும் தாண்டி மாணவர்கள் வெற்றிப்பாதைக்கு கொண்டுசென்றிருந்தனர். வடக்கைவிட கிழக்கில் தான் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்தது. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டதனால் அவர்களது பங்குபற்றுதலிலும் ஒரு தொய்வு ஏற்பட்டது. அம்பாறையில் இருந்துவந்த பேரூந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இறுதிநேரம் பிரகடன உரையை வாசிக்கத் தயாரானபோது சிவப்பு – மஞ்சள் கொடிகளை சிலர் எரிக்க முற்பட்டனர். மாணவர்கள் அதனையும் தடுத்து நிறுத்தினர்.உண்மையில் பேரணியை வெற்றிகரமாக்கியதில் ஐந்து தரப்பினரின் பங்கு முக்கியமானது. ஒன்று மாணவர்கள், இரண்டாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களது அமைப்புக்களைச் சேர்ந்த அம்மாமார்கள், மூன்று மதத் தலைவர்கள், நான்காவது அரசியல் தலைவர்கள், ஐந்தாவது ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழ்ச் சமூகம் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளது. இந்தத் தரப்புகள்தான் போராட்டத்திற்கு கூட்டுமுகத்தைக் கொடுத்திருந்தனர். ஊடகங்களில் வலைத்தளங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இப் பேரணி விவகாரத்தில் சில அரசியல் தரப்புக்களின் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கதாகவும், கவலை அழிப்பதாகவும் இருந்தன. அதில் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. பேரணியை நிராகரிப்பதற்கு முன்னணி கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. முழுக்க முழுக்க கட்சி அரசியலையும், தேர்தல் அரசியலையும் நோக்கமாகக் கொண்டவை. 13வது திருத்தத்தை நிராகரிப்போம் என்பதையும் முக்கிய சுலோகமாகக் கொள்ளவேண்டும் என்பதையும் அது ஏற்கப்படாவிட்டால் தாம் பங்களிப்புச் செய்யமாட்டோம் என முன்னணி கூறியிருந்தது.
பேரணியின் பிரகடனம் அரைகுறை தீர்வுகள் அனைத்தையும் கடந்த உன்னத தீர்வை வலியுறுத்துகின்றது. போதாக்குறைக்கு ஊடக மாநாட்டை நடாத்தியும் முன்னணி பேரணிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்திருந்தது. எதிரி செய்கின்ற பணிகளை இது விடயத்தில் முன்னணி செய்து முடித்தது.
முன்னணியின் இந்த போக்கு கட்சி அரசியலுக்கும் ஒருபோதும் உதவப்போவதில்லை. மதத் தலைவர்கள், மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைச் சேர்;ந்த தாய்மார்கள், கருத்துருவாக்கிகள் என அனைவரையும் பகையாளிகள் ஆக்கிக்கொண்டு கட்சி அரசியலை எவ்வாறுதான் முன்னணி மேற்கொள்ள போகின்றது. இது கொள்கை அரசியல் அல்ல. கிறுக்கு அரசியல்.
இரண்டாவது சுமந்திரன் – சாணக்கியன் தரப்பினராவர். இவர்கள் பேரணியை நிராகரிப்பதற்கு அவர்கள் பின்பற்றும் கொழும்பு அனுசரிப்பு அரசியல்தான் பிரதான காரணமாகும். கொழும்பு அரசியல்காரர்கள் மனம்நோகக்கூடாது என்பதற்காககவே பேரணியை அவர்கள் தவிர்த்திருந்தனர். இன்னோர் காரணம் பேரணியில் தங்களுக்கு முதன்மை நிலை கிடைக்காது என்பதாகும். “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” போராட்டத்தை சுமந்திரன் உரிமைகோர வெளிக்கிட்டு நேர்ந்த அனர்த்தங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை போராட்டத்தை வெற்றிகரமாக்கியதில் சாணக்கியனின் பங்கினை மறுக்க முடியாது.
இந்த நிராகரிப்புக்களை சிறீதரன,சாள்ஸ் நிர்மலநாதன், சிவாஜிலிங்கம், யோகேஸ்வரன், துரைரத்தினம் ஆகியோர் சமன் செய்தனர் என்றே கூறலாம் சிறீதரனும், சாள்ஸ் நிர்மலநாதனும் வன்னியில் பேரணி சிறப்பாக இடம்பெற பங்களித்ததோடு மட்டக்களப்பில் இடம்பெற்ற இறுதி நிகழ்விலும் பங்களிப்புச் செய்திருந்தனர்.
இப் பேரணி பலவகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்று தமிழ் மக்கள் ஒரு தேசமாக நிற்கின்றோம் என்பதை இது வெளிப்படுத்தியிருந்தது. தேசமாக எழுந்து நிற்பதில் பல தரப்பினரின் ஒருங்கிணைவு அவசியம். பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாக இது இருந்தது. மாணவர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பல தரப்பினரும் இதில் ஒருங்கிணைந்திருந்தனர்.
இரண்டாவது இப்பேரணி மூலம் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்காக எழுந்து நின்றமையாகும். இன்றைய காலகட்டத்தில் வடக்கு – கிழக்காக எழுந்து நிற்பது மிகவும் அவசியம். பெரும்தேசியவாதிகளும் புவிசார் அரசியல்காரரும், பூகோள அரசியல்காரர்களும் இனப்பிரச்சினையை வடக்குடன் மட்டும் முடக்கவே விரும்புகின்றனர். அரசியல் தீர்வையும் அதற்கேற்பவே சிபார்சு செய்ய முனைகின்றனர். மறுபக்கத்தில் கிழக்கில் தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியல் ஒன்று முன்னாள் போராளிகளைக்கொண்டே கட்டியெழுப்பப்படுகி;ன்றது. இவற்றையெல்லாம் தடுத்துநிறுத்த வேண்டும் என்றால் வடக்கு – கிழக்காக எழுந்து நிற்பது அவசியம். பேரணி இதில் முதல் காலடியை எடுத்துவைத்துள்ளது.
மூன்றாவது இதுபோன்ற பேரணிகளும், சுதந்திரதினத்தை ஒரு கரிநாளாக முன்னிலைப்படுத்துவதும் வரலாற்றைக் கடத்தும் கருவிகளை புதுப்பிப்பதாக உள்ளன. தமிழ் மக்களை ஒரு தேசமாக தொடர்ச்சியாகப் பேணுவதற்கு வரலாற்றை புதிய தலைமுறைக்கு கடத்திக்கொண்டிருப்பது அவசியமானதாகும். தமிழ் மக்கள் ஒரு அரசற்ற சமூகமாக இருப்பதால் வரலாற்றைக் கடத்தும் முயற்சிகளை தமிழ் மக்களே முன்னெடுக்க வேண்டும்.
சுதந்திரம் என்பது தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரமாகும். இந்த அனுமதிப் பத்திரத்தைக் கொண்டே தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழிக்கும் கட்டமைப்புசார் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது. மறு பக்கத்தில் அரச அதிகாரக் கட்டமைப்பை சிங்கள மயமாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
ஒரு வகையில் சுதந்திரத்திற்கு பிற்பட்ட வரலாறு என்பது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழித்த வரலாறுதான். இன்னோர் பக்கத்தில் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பை சிங்கள மயமாக்கிய வரலாறும்தான். இந்த அழிப்பு வரலாற்றையும், சிங்கள மயமாக்கல் வரலாற்றையும் புதிய தலைமுறைக்கு கடத்துவதற்கு இந்தப் பேரணி உதவியிருந்தது.
பேரணியின் மிகுந்த முக்கியத்துவம் அதன் பிரகடனம் தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், அதன் வழிவரைபடம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் பிரகடனம் தெளிவாக வெளிக்காட்டியது. அரசியல் தீர்வு முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் இக் காலத்தில் இப் பிரகடனம் மிகவும் முக்கியமானது. அதிகளவில் தமிழ்மக்கள் பேரவையின் தீர்வு யோசனையை பிரகடனம் ஒத்திருந்தது எனலாம். பிரகடனத்தில் நான்கு விடயங்கள் மிகவும் முக்கியமானவை. அதில் ஒன்று அரசியல் தீர்வின் கோட்பாட்டு அடிப்படைகளாகும். தேச அங்கிகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமை என்கின்ற கோட்பாட்டு அடிப்படைகளை பிரகடனம் வெளிப்படுத்தியிருந்தது.
இரண்டாவது சமூக ஒப்பந்தமாகும். இந்த சமூக ஒப்பந்தம் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனையிலும் பிரதானமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சமூக ஒப்பந்தத்தின்போது கோட்பாட்டு அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இக் கோட்பாட்டு அடிப்படைகள் திம்புமாநாட்டிலும் தமிழ்த் தரப்பினால் வெளிப்படுத்தப்பட்டது. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பனவே திம்பு மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்ட கோட்பாட்டு அடிப்படகளாகும்.
மூன்றாவது அரசியல் தீர்விற்கான வழிவரைபடமாகும் இதில் பிரதானமாக சர்வதேச மத்தியஸ்தம் காலஅட்டவணை, உடனடிப்பிரச்சினைகள், புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகள்உட்பட சிவில் சமூகம் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தை செயற்பாட்டில் உள்ளடக்குதல் பொதுவாக்கெடுப்பு, முஸ்லீம்கள், மலையக மக்கள் என்போருக்கான அரசியல் தீர்வு என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.
உடனடிப் பிரச்சினைகளுக்குள் ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல், சிங்கள குடியேற்றங்களை அகற்றுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், நினைவேந்தல்களுக்கான அச்சுறுத்தல்களை அகற்றுதல் என்பன உள்ளடக்கப்படடிருந்தன.
இதுவரை இன அழிப்பிற்கு குறிப்பாக இறுதிப்போரின்போது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச சமூகம் நிலைமாறுகால நீதியையே சிபார்சு செய்திருந்தது. அந்த நீதிவழங்கல் பெருமளவிற்கு சிறீலங்கா அரசின் செயற்பாடுகளையே வேண்டி நின்றது. இந்த நிலைமாறுகால நீதி வழங்கல் செயற்பாடு சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பமின்மையால் தோல்வி கண்டிருந்தது. எனினும் புவிசார் அரசியல் காரார்களும் பூகோள அரசியல்காரர்களும் தங்களின் நலன்களுக்காக செயற்படாது முடங்கிக் கிடக்கும் நிலைமாறுகால நிதியையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. புறக்கணிப்புக்களுக்கு நிலைமாறுகால நீதி பொருத்தமானதாக இருக்கலாம் ஆனால் இன அழிப்புக்கு தொடர்ச்சியாக உட்பட்டுவரும் மக்கள் கூட்டத்திற்கு பரிகார நீதியே பொருத்தமானதாகும். பேரணியின்பிரகடனம் பரிகார நீதியையே சிபார்சு செய்துள்ளது. பரிகார நீதி முழுக்க முழுக்க சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகளை வேண்டி நிற்பதாகும்.
மொத்தத்தில் இப்பேரணி தமிழ்த் தேசிய இலக்கு நோக்கிய பயணத்தில் முக்கிய வெற்றிப்படி எனலாம். எனினும் இதன் தேறிய வெற்றி பேரணியின் அறுவடைகளை பாதுகாப்பதிலேயே தங்கியிருக்கின்றது.
கட்டுறுதியான அரசியல் சமூகத்திற்கு ஏற்ற ஒருங்கிணைவு, தொடர்செயற்பாடு என்பன இல்லாமல் பேரணியின் அறுவடைகளைப் பாதுகாக்க முடியாது.
பொங்குதமிழ,; எழுகதமிழ், பொத்துவில் முதல் பொலிகண்டிவரை என்பவற்றின் அறுவடைகள் போதியளவு பாதுகாக்கப்படவில்லை.
“வடக்கிலிருந்து கிழக்கும்” அவ்வாறுதான் இருக்கப்போகின்றதா?
அடுத்த இதழில் பேரணியின் போதாமைகளைப் பார்ப்போம்.