பிச்சையெடுக்கச் சுதந்திரம்? – ஆய்வாளர் நிலாந்தன்

“நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்” இப்படிப் பேசியிருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது. நாங்கள் சுதந்திரத்தை இழந்து விட்டோம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இதை எப்பொழுது கூறுகிறார்? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகளின் பின் கூறுகிறார். ஆயின்,2009 ஆம் ஆண்டு ராஜபக்ச சகோதரர்கள் வென்று கொடுத்த சுதந்திரம் எங்கே? அல்லது அது சுதந்திரமே இல்லையா?

ராஜபக்சக்கள் யாருக்காக நாட்டை மீட்டுக் கொடுத்தார்களோ, அந்த மக்களே இப்பொழுது நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.அதைத் தனது உரையில் ரணில் குறிப்பிடுகிறார்.அதன்பின் நான்கு நாட்கள் கழித்து நாடாளுமன்றத்தில் கொள்கை விளக்க உரையிலும் அவர் அதைக் குறிப்பிடுகிறார். நாட்டை விட்டுப் போகாதீர்கள் என்று. அண்மையில் முகநூலில் ஒரு மூத்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளரின் மகன் ஒரு பதிவைப் போட்டிருந்தார்.தான் சந்திக்கும் பெரும்பாலான நண்பர்கள் எப்படி நாட்டை விட்டு வெளியேறலாம் என்பதைப் பற்றியே கதைக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில் வசித்த ஒரு ஊடகவியலாளர் சொன்னார்… அக்காலகட்டத்தில் ஒன்றில் சாலை கடற்கரையை அல்லது வங்கக் கடலைப் பார்த்தபடி எந்த வழியால் தப்பி போகலாம்? எப்பொழுது தப்பி போகலாம்? என்று சிந்தித்ததை ஒத்த நிலைமை இது.அக்காலகட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தப்பிப்போவதைப் பற்றியே சிந்தித்தார்கள்.13 ஆண்டுகளின் பின் இப்பொழுது நாடு முழுவதும் அந்த நிலைமை வந்திருக்கிறது.

ஆயின்,ராஜபக்சக்கள் வென்று கொடுத்த சுதந்திரம் எங்கே?அல்லது அது சுதந்திரமே இல்லையா?அதைச் சாப்பிட முடியாதா?அதை வைத்து உழைக்க முடியாதா?

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ராஜபக்சக்கள் தோற்கடித்தார்கள். ஆனால் அதற்காக அவர்கள் எந்தெந்த நாடுகளிடம் கையேந்தினார்களோ அந்த நாடுகளிடம் நாட்டில் ஏதோ ஒரு பகுதியை அல்லது ஏதோ ஒரு வளத்தை இழந்து விட்டார்கள். சீன விரிவாக்கம், அதற்கு எதிரான இந்தோ பசிபிக் வியூகம், குவாட் வியூகம் என்பதற்குள் இச்சிறிய நாடு சிக்கிவிட்டது. நாட்டின் துறைமுகங்களில் ஒன்றாகிய அம்பாங்கோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எழுதி பெற்றுக் கொண்டு விட்டது. கொழும்புத் துறைமுகத்துக்கு அருகே சீனா ஒரு துறைமுகப் பட்டினத்தைக் கட்டியெழுப்பிவிட்டது. அத்துறைமுகப் பட்டினத்துக்கு நாட்டில் உள்ள மாகாண சபைகளை விடவும் சில அதிகாரங்கள் விசேஷமாக கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. தன் சொந்த மக்களுக்கு கொடுக்கத் தயாரற்ற அதிகாரங்களை பிறத்தியாருக்கு கொடுக்கிறது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு. ஒரு காலம் தேரவாத சிங்கள பௌத்தத்தின் மரபுரிமை சின்னங்களே இந்த நாட்டின் அடையாளங்களாக இருந்தன.ஆனால் இப்பொழுது சீனா கட்டிக் கொடுத்த தாமரை கோபுரந்தான் நாட்டின் நவீன அடையாளமாக மாறியிருக்கிறது. சீன விரிவாக்கத்தின் பலனாக இலங்கை தீவின் வரைபடமே மாறிவிட்டது.

சீன விரிவாக்கத்துக்கு எதிராக இந்தியா தனது நிலைகளை இச்சிறிய தீவுக்குள் பலப்படுத்த முற்படுகின்றது.குறிப்பாக வடக்கில் கடலட்டை ஒரு ராஜதந்திரக் கருவியாக மாறிவிட்டது.அது மட்டுமல்ல போரை வென்ற ராஜபக்சக்களின் சுதந்திரம் பெருமளவுக்கு நாட்டுக்குள்ளேயே சுருங்கத் தொடங்கிவிட்டது.அமெரிக்க கண்டத்தின் இரு பெரிய நாடுகளில் அவர்கள் பயணம் செய்யவும் சொத்துக்களை முதலீடு செய்யவும் தடை உருவாகியிருக்கிறது.அதுபோன்ற தடைகள் ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும்.ராஜபக்சங்களுக்கு அமெரிக்க கண்டத்தில் மட்டும் தடையில்லை, உள்நாட்டிலும் அவர்களுக்கு கடந்த ஆண்டு பாதுகாப்பு இருக்கவில்லை.அதனால்தான் மூத்த ராஜபக்சக்கள் நாட்டின் படைத்தளங்களில் ஒழிந்தார்கள்.அல்லது நாடு விட்டு நாடு ஓடிக்கொண்டிருந்தார்கள்.சொந்த நாட்டிலேயே அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது.அவர்கள் வென்று கொடுத்த நாட்டிலேயே அவர்களுக்கு நிம்மதியாக உறங்க முடியாமல் போய்விட்டது. ஏன் இந்த நிலை வந்தது? அப்படியென்றால் அவர்கள் பெற்ற வெற்றியின் பொருள் என்ன?

யுத்தந்தான் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியது என்றால்,யுத்தம் முடிந்த பின்னரும் ஏன் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியவில்லை? நாடு ஏன் அதன் முதலீட்டுக் கவர்ச்சியை இழந்தது?

ஏனென்றால் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற முடியவில்லை. அப்படி மாற்றவும் முடியாது. ஏனென்றால் நாட்டின் மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினரை பூச்சி, புழுக்களைப் போல கொன்று குவித்துப் பெற்ற வெற்றியது. ஒரு இனப்படுகொலையை அரசியல் தீர்வாக மாற்ற முடியாது.மாறாக இனப்படுகொலைக்கு எதிரான நீதிதான் அரசியல் தீர்வாக அமைய முடியும். அதைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள். முழுமையான 13ஐ அல்ல.

ரணில் விக்கிரமசிங்க சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினார்.ஆனால் சுதந்திரதின விழாவன்று அவரால் அப்படிப்பட்ட அறிவிப்பு எதனையும் வெளியிட முடியவில்லை.அவர் கொழும்பில் 200 மில்லியன் ரூபாய் செலவில் சுதந்திர தினத்தை கொண்டாடிய பொழுது, தமிழர் தாயகத்தில் சுதந்திர தினம் ஒரு கரி நாளாக அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி தமிழ் மாணவர்கள் ஊர்வலம் போனார்கள்.

தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பது இதுதான் முதல் தடவையல்ல. கடந்த பல தசாப்தங்களாக அவர்கள் அவ்வாறுதான் அனுஷ்டித்து வருகிறார்கள். 1957 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு கேட்டது.அந்த அழைப்பை ஏற்று திருமலையில் நடராஜன் என்றழைக்கப்படும் இளைஞர் மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஏறி கட்டப்பட்டிருந்த சிங்கக் கொடியை அகற்றி கறுப்பு கொடியை கட்ட முற்பட்டார்.அவரை திருக்கோணமலை சந்தையில் வியாபாரஞ் செய்த ஒரு சிங்களவர் வேட்டைத் துவக்கினால் சுட்டு வீழ்த்தினார்.இன்றுவரையிலும் நடராசனுக்கு நீதி கிடைக்கவில்லை.தமிழ் மிதவாதிகளால் தூண்டிவிடப்பட்டு தமிழ் இளையோர் எத்துணை துணிகரமான செயல்களில் இறங்கமுடியும் என்பதற்கு நடராசன் முதலாவது முன்னுதாரணம்.தமிழ் மக்களின் போராட்டத்தில் முதல்வித்து அவர்.நடராசனுக்குப் பின் அவ்வாறு துணிச்சலாகத் தங்கள் உயிர்களை,உறுப்புகளை,சொத்துக்களை,கல்வியை,இழந்த தியாகிகளின் மிகநீண்ட பட்டியல் தமிழ்மக்களிடம் உண்டு. ஆனாலும் நடராசன் சுட்டு வீழ்த்தப்பட்டு 65ஆண்டுகளின் பின்னும்,தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சுதந்திர தினம் கரிநாளாகவே காணப்படுகிறது.

ஆனால் நடராசனை கறுப்புக்கொடி ஏந்துமாறு தூண்டிய தமிழ் மிதவாதிகளின் வழிவந்தவர்கள் பின்னாளில் தாங்களே சுதந்திரதின விழாவில் தேசியக் கொடியை கைகளில் ஏந்தி அசைத்தார்கள்.கொல்லப்பட்ட நடராசனை அதைவிடக் கேவலமாக அவமதிக்கமுடியாது.அவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலகட்டத்தில்,சுதந்திரதின விழாவில் பங்குபற்றிய தமிழ்த் தலைவர்கள்,இப்பொழுது மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் காந்திக் குல்லாயும் கறுப்புக் கொடியுமாக நிற்கிறார்கள்.அவர்கள் எதற்காக காந்திக் குல்லாய் அணிந்தார்கள் என்று தெரியவில்லை.ஆனால் அவர்களுடைய நடப்பு அரசியலை வைத்து பார்க்கும்போது, அவர்களுடைய தோற்றம் வினோதஉடைப் போட்டியில் வேசமிட்டு வந்தவர்களைப்போல காணப்பட்டது. அவர்கள் விதவிதமான வினோத உடைகளை அணிந்து தமிழ் மக்களைக் கவர முயற்சிக்கிறார்கள்.

ஒருபுறம் தமிழ் அரசியல்வாதிகள்,அரசியலை வினோத உடைப் போட்டியாக மாற்றுகிறார்கள்,இன்னொருபுறம் ஜனாதிபதி ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு தருவேன் என்கிறார்.கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் போலீஸ் அதிகாரம் தொடர்பில் இப்போதுள்ள நிலைமைகளில் மாற்றம் இல்லை என்று கூறுகிறார்.அதாவது 13 மைனஸ்? அதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் தமிழ் மக்களுக்கு போலீஸ் அதிகாரத்தைப் பெறும் சுதந்திரம் இல்லை.ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வைப் பெறும் சுதந்திரந்தான் உண்டு.ஆனால் அதைக் கூறியது யாரென்றால் சுதந்திரமில்லாத ஒரு நாட்டின் தலைவர்?

புவிசார் அரசியல் விளக்கங்களின்படியும்,பூகோள அரசியல் விளக்கங்களின்படியும் ஒரு பிராந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் ஒரு சிறியநாடு முழு அளவுக்கு சுதந்திரமானதாக இருக்க முடியாது.ஆனால் அச்சிறிய நாடு வெளிச்சக்திகள் தலையிட முடியாதபடி உருகிப்பிணைந்த ஒரு நாடாக இருந்தால்,அது ஒப்பீட்டளவில் ஆகக்கூடிய பட்சம் சுதந்திரமாக இருக்கலாம்.சிறிய நாடுகளைப் பொறுத்தவரை சுதந்திரத்தின் அளவு என்பது ஐக்கியத்தின் அளவுதான்;நல்லிணக்கத்தின் அளவுதான்.அந்தநாட்டில் வாழும் எல்லா மக்கள் கூட்டங்களையும் அந்த நாட்டின் சகநிர்மாணிகளாக ஏற்றுக்கொண்டு பல்லினத்தன்மைமிக்க ஒரு நாட்டைக் கட்டியெழுப்பினால்,அது ஆகக்கூடியபட்சம் சுதந்திரமாக இருக்கலாம்.இல்லையென்றால் தனக்குள் மோதிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை வெளிச்சக்திகள் வேட்டையாடும்.அதுவும் இலங்கை போன்று மூன்று பேரரசுகளின் இழுவிசைகளுக்குள்,கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு ஜல சந்தியில், காணப்படும் மிகச்சிறிய நாடானது, தனக்குள் அடிபடுமாக இருந்தால் அது பேரரசுகள் பங்கிடும் ஒர் அப்பமாக மாறிவிடும்.அதுதான் இப்பொழுது நடக்கிறது.

இலங்கைத்தீவு இப்பொழுது ஒரு சுதந்திரமான நாடு அல்ல. இறமையுள்ள நாடும் அல்ல.தமிழ் மக்கள் சுதந்திரமாக இல்லாதவரை சிங்கள மக்களும் சுதந்திரமாக இருக்கமுடியாது என்பதைத்தான் கடந்த 13ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன.போரில் வெற்றி பெற்ற பின்னரும் ஏன் இந்த நாடு சுதந்திரமாக இருக்க முடியவில்லை?ஏன் இந்த நாடு செழிப்பாக நிமிர முடியவில்லை?தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்த பின்னரும் தமிழ் அரசியலை முன்வைத்து ஏன் ஜெனிவாவில் ஒவ்வொரு ஆண்டும் பதில் கூற வேண்டியிருக்கிறது?வடக்கில் கடலட்டை எப்படி ஒரு ராஜதந்திரக் கருவியாக மாறியது?ஆயுத மோதல்களில் வெற்றி பெற்ற பின்னரும் இந்த நாடு ஐ.எம்.எப் போன்ற அனைத்துலக நிறுவனங்களின் சொற்கேட்டு கீழ்ப்படியும் ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது?

இலங்கை அதன் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒரு காலகட்டம் எனப்படுவது ஐ.எம்.எப்.போன்ற வெளித்தரப்புகளிடம் கடன்கேட்டுக் கையேந்தும் ஒரு காலமாகவே காணப்படுகிறது.இவ்வாறு வெளிநாடுகளிடமும் உலகப்பொது நிறுவனங்களிடமும் கையேந்தும் ஒருநாடு தன்னை சுதந்திரமான நாடாக கூறிக்கொள்ள முடியுமா?கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளிற் சொன்னால் “ஒடுக்கும் இனம் என்றைக்குமே நிம்மதியாக இருக்கமுடியாது”.அது சுதந்திரமாகவும் இருக்கமுடியாது.ஒரே ஒரு விடயத்தில்தான் இப்போதைக்கு சுதந்திரமாக இருக்கலாம்.பிச்சையெடுப்பதற்கான சுதந்திரம்.

Recommended For You

About the Author: Editor Elukainews