யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சட்டவிரோதமான கடற்தொழில்களை தடை செய்யுமாறு கோரி இன்றைய தினம் கடற்தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுருக்கு வலை உட்பட்ட பல்வேறு சட்டவிரோத தொழில்கள் வடமராட்சிக் கிழக்கில் இடம்பெற்று வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த இடத்திற்கு வருகை தந்த மருதங்கணி பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் கடற்தொழிலாளர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனடிப்படையில் நாளைய தினம் குறித்த விடயம் தொடர்பில் ஆராய 55 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தில் ஒன்று கூடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,அதுவரை போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் குறித்த எதிர்ப்பு போராட்டத்தை கைவிடுவதாகவும் நாளைய தினம் ஒரு நல்ல முடிவு ஒன்று தரப்படாதபட்சத்தில் தம்முடைய போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நீரியல் வளத்துறை மற்றும் கடற்தொழில் அமைச்சினால் விடுக்கப்பட்ட கட்டளைகளை கடற்படையினர் செயற்படுத்துவதில்லை என்றும், சட்ட விரோத தொழிலில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இன்று கடற்தொழிலாளர்களால் பிரதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியிலிருந்த கடற்தொழிலாளர்கள் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.