பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டவர்களுக்கு அவர்கள் முன்பு செய்த வேலையை கொடுக்க மீள வழங்க வேண்டும் என்றும் கோரி சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
அவர் முன்வைத்த பிரேரணையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து பிணையில் விடுதலை செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி உரிய தீர்மானத்தை ஜனாதிபதி, சட்டமா அதிபர், பிரதமர் பிரதம நீதியரசர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது. அதன் முழுமையான விபரம் வருமாறு
கௌரவ தவிசாளர், செயலாளர்,
கௌரவ உப தவிசாளர்,
கௌரவ உறுப்பினர்கள்
சாவகச்சேரி பிரதேச சபை கொடிகாமம்
07.03.2023
பயங்கரவாத சட்டத்தில் சந்தேகத்தின் மீது கைது செய்து பிணையில் விடுதலை செய்த அரச உத்தியோகரை மீண்டும் பணியில் இணைத்தல் தொடர்பான பிரேரணை
எமது நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு பல சந்தர்ப்பங்களில் மக்கள் கோரிக்கை கொடுத்து வரும் நிலையிலும் அச்சட்டத்தினை எந்த ஒரு அரசாங்கமும் நீக்காமல் தொடர்ந்து அச்சட்டத்தின் கீழ் பல அப்பாவி பொதுமக்கள் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக விடுதலை செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டும் தடுத்து வைக்கப்பட்ட சிலர் பிணையில் விடுதலை செய்தும் உள்ளார்கள் இதில் பல அரச உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் இவர்கள் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் முன்பு பணியாற்றிய அரச பணியை தொடர்ந்து பணியாற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு இக் கைது நடவடிக்கையில் பளை வைத்தியசாலையின் மருத்துவர், கைதடி வைத்தியசாலையில் பணியாளர் போன்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இவர்களை உடனடியாக வைத்திய சேவையில் இணைப்பதன் ஊடாக பல மக்கள் பலனடைவார்கள் ஆகவே உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் கௌரவ சபை இப் பிரேரணை ஏகமனதாக ஏற்று தீர்மானத்தினை உரிய அதிகாரிகளான கௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமர்,நீதி அமைச்சர், சட்டமா அதிபர் போன்றவர்களுக்கு இப்பிரதியினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றுள்ளது.
வை.ஜெகதாஸ்