உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பினர் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணை முற்றிலும் தவறானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10.03.2023) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதற்கமைய, முடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி பாருங்கள் என்றும் அதன் பின்னர் நிகழ்வதை தாம் பார்த்துக் கொள்வதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இந்நிலையில் வரவு செலவு திட்டத்தின் ஊடாக நாடாளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியை நிறைவேற்றுத்துறை கட்டுப்படுத்தியமை காரணமாகவே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரசியல் அதிகாரம் நீதிமன்றத்துக்கு பிரயோகிக்கப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.