
கறைபடியாத தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்காதீர் – நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரத்தில் அங்கஜன் இராமநாதன் கண்டனம்.
தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கல் செயற்பாட்டினை கண்டித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தனது அறிக்கையில்;
வெடியரச மன்னன் யாழ்ப்பாண இராசதானிகளின் கீழ் கி.மு 200ஆம் ஆண்டுகளில் நெடுந்தீவு மற்றும் காரைநகர் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசன் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.
இந்நிலையில் வெடியரசன் கோட்டையின் எச்சங்களை பௌத்த தாது கோபுர எச்சங்களாக சித்தரித்து மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாட்டிற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
நெடுந்தீவு தமிழர்களுடைய வரலாற்றை பறைசாற்றும் தலைசிறந்த சுற்றுலாத்தளம்.
இந்நிலையில் அங்கு திட்டமிட்டு பௌத்தமயமாக்கல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
கோட்டை மற்றும் மாவிலி இறங்குதுறைப் பகுதிகளில் பிரதேசசபையின் அனுமதி இன்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் நாட்டப்பட்டுள்ள விளம்பர பலகையை அகற்றி கோட்டையின் பாரம்பரியத்தையும் – வரலாற்றையும் பேண உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கறைபடியாத வீரத் தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.அதிகாரிகள் இனங்களுக்கிடையில் விரோதங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு மக்களுக்குள் குரோதங்களை ஏற்படுத்திவிட்டு ஒருபோதும் பொருளாதார மீட்சியைப் பெற முடியாது என்பதனை உரிய தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும் – என குறிப்பிட்டுள்ளார்.