நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மாலை உருத்திரசேனை மற்றும் சிவசேனை அமைப்பினரால் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்திற்கு அண்மையில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
உருத்திரசேனை அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருவள்ளுவர் திருவுருவப் படம் திறப்பு விழா யாழ் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றதையடுத்து குறித்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உடனடியாக காரணமானவர்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், சிவலிங்கமும் சிலைகளும் மீள நிறுவப்பட வேண்டும், ஏற்கனவே கடந்த காலங்களில் சைவ சமயிகளின் வழிபாட்டிற்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட பின்னணியில் மேற்படி சம்பவத்தை மத நல்லிணக்கத்திற்கு பாரிய ஊறு விளைவிக்கும் இச்செயலை உரிய நோக்கில் அரசு அணுகி தீர்வு காண வேண்டும், ஆதி சிவன் கோவில்கள் மீதான தொடர் விரும்பதகாத செயற்பாடுகள் தமிழ்ச் சைவர்களின் மனதை ஆழமாக பாதித்தது வருகின்றது என கூறி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சிவேனை மற்றும் உருத்திரசேனை அங்கத்தவர்கள் உட்பட நிகழ்வில் கலந்துகொண்டோரும் பங்கெடுத்தனர்.
இந்த விடயத்தில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலூக்கத்துடன் கூடிய எதிர்ப்பை வெளிகாட்ட வலியுறுத்துகின்றோம் – என அவர்கள் தெரிவித்தனர்.