விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதியை பெற்றுத்தருவதாக அமைச்சர் பலமுறை கூறியும் நடைபெறவில்லை என கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் குறிப்பிட்டு உரையாற்றிய நிகழ்வில் மிக விரைவில் அது பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தரம் 1க்கு மாணவர்களை சேர்க்கும் தேசிய நிகழ்விலேயே இவ்விடயம் பேசப்பட்டது குறித்த நிகழ்வில் தலைமையுரையாற்றிய பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் குறிப்பிடுகையில்,
எமது பாடசாலைக்கு வழங்கப்பட்ட விளையாட்டு மைதான காணியை நாங்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. அந்த மைதானத்திற்கு செல்லும் பாதை படையினர் வசம் உள்ளது. இதனால் மாணவர்கள் நீண்ட தூரம் சற்றி பயணிக்க வேண்டி உள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்தேன். ஆனால் செய்வோம் செய்வோம் என்றார் இதுவரை செய்து தரப்படவில்லை. இன்று விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி குறித்த வீதியை பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகையில்,
விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதி தொடர்பில் கூறியிருந்தார். இவ்விடயம் தொடர்பில் அதிபர் பலமுறை கூறியுள்ளார். இன்று நிகழ்வு முடிந்ததும் குறித்த இடத்தை பார்வையிட்டு உரிய தரப்பினருடன் பேசி விரைவில் தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என அமைச்சர் இதன்போது தெரிவித்தா்ர.