எழுவைதீவின் பெருவளமாக உள்ள பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், கருவேலை மரங்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுவைதீவு மக்களிடம் தெரிவித்துள்ளார்.
எழுவைதீவு மக்களும், கடற்றொழிலாளர்களும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (28) எழுவைதீவில் நடைபெற்றுள்ளது.
அப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் ஒழுங்குசெய்யப்பட்ட இக் கலந்துரையாடலில், அவர்களது அழைப்பின் பேரில் கலந்துகொண்டிருந்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, எழுவைதீவின் பெருவளமாக உள்ள பனைவளம் அழிக்கப்பட்டுவருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், அதிவேகமாக பரவிவரும் கருவேலை மரங்களின் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தொடர்ச்சியாக தாம் எதிர்கொள்ளும் குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றியும் மீன்களை பதனிடுதலில் உள்ள இடர்பாடுகள் உட்பட மீனவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடிகள் குறித்தும் அப்பகுதி மக்களும், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.