பொருளாதார முன்னேற்றத்தின் பயன் விலை குறைப்பு ஊடாக வழங்கப்படும் -லசந்த அழகியவன்ன

எரிபொருள் விலைக்குறைப்புக்கு அமைய ஏனைய பொதுப் போக்குவரத்து சேவைத்துறைகளின் கட்டணமும் குறைக்கப்படவேண்டும் என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், பொருளாதார முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு விலை குறைப்பு ஊடாக வழங்குவோம் எனவும் பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் நிவாரணத்தை அனைத்து சேவைக் கட்டமைப்பு ஊடாகவும் நாட்டு மக்களுக்கு 24 மணித்தியாலங்களுக்குள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட ஆலோசனை வழங்கினார்.

அதற்கமையவே பஸ் கட்டணம் குறுகிய நேரத்திற்குள் திருத்தம் செய்யப்பட்டது.

பஸ் கட்டண திருத்தக் கொள்கைக்கு அமைய எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படும், இதன்போது எரிபொருள் விலை மற்றும் ஏனைய காரணிகளை கருத்திற் கொண்டு பஸ் கட்டணத்தை நாட்டு மக்களுக்கு ஏற்றாற்போல குறைக்க எதிர்பார்த்துள்ளோம்.

எரிபொருள் விலைக் குறைப்புக்கு அமைய ஏனைய பொதுப் போக்குவரத்து சேவைத் துறைகளின் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும் என உரிய தரப்பினரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

பாடசாலை பஸ், வேன், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைக் கட்டணம் நிச்சயம் குறைக்கப்படவேண்டும்.

புகையிரத கட்டணத்தை மறுசீரமைப்பது தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கவேண்டும்.

புகையிரத சேவைக்கான எரிபொருள் செலவுக்கும், கிடைக்கும் வருமானத்திற்கும் இடையில் பாரிய பற்றாக்குறை காணப்படுகிறது.

ஆகவே புகையிரத கட்டணம் தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

பொருளாதார முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு விலை குறைப்பு ஊடாக வழங்குவோம்.

சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினால் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து வெகுவிரைவில் மீள முடியும் எனத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews