கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 02 இலட்சம் பேர் வரையான மக்களுக்கு சேவைகளை வழங்குகின்ற வைத்தியசாலையான கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் முக்கியமான சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலை வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை
மேலும், குறிப்பாக சிறுநீரக நோயாளிகளுக்கான மருந்துகள் மற்றும் கற்பவதிகளுக்கான முக்கியமான மருந்துகள் என்பன வைத்தியசாலையில் இல்லாத நிலை காணப்படுகிறது.
மாவட்ட பொது வைத்தியசாலையில் மாதாந்த சிகிச்சை பெற்று வரும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பவதிகளுக்கு குறித்த மருந்துகளை வெளியிடங்களில் பெற்றுக் கொள்ளுமாறு சிட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் பெரும் பொருளாதார சுமைகளுக்கு முகம் கொடுக்கும் நோயாளர்கள் வெளியிடங்களில் பணத்துக்கு மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது.
எனவே தற்போதைய தகவல்களின் படி இவ்வாறு 23 இற்கும் மேற்பட்ட மருந்துகள் இல்லாதுள்ளதாக அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.