யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை தகனம் செய்வதற்கு சிவ பூமி அறக்கட்டளையினர் காணியை வழங்கியுள்ளதாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் தெரிவித்தார்.
நேற்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் விருந்தினர் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலையில், மனித உடல்களில் இருந்து எடுக்கப்படும் அவையங்கள் மற்றும் வேறு கழிவுகளை எரிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் பல இடங்களை தெரிவு செய்திருந்த போதும் அதற்கான இடங்கள் எவையும் வழங்கப்படவில்லை.
ஆகையால் அந்தக் கழிவுகளை குருநாகலில் தகனம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
தற்போது வைத்தியசாலையானது மிகுந்த நிதி நெருக்கடிகளிலும் மருந்து தட்டுப்பாடுகளிலும் உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த கழிவுகளை எடுத்துச் செல்வதற்கு அதிக பண செலவு ஏற்படும்.
ஆகையால் எங்களது சிவ பூமி அறக்கட்டளையின் ஒரு பகுதி காணியை இதற்காக நாங்கள் வழங்கியுள்ளோம்.
மனித உடலில் இருந்து எடுக்கப்படும் அவையங்களை எரிக்க வேண்டும். இந்த 21வது நூற்றாண்டிலும், அதற்காக தெரிவு செய்யப்படும் இடங்களில் அந்த பணிகளை முன்னெடுக்க விடாதது என்பது வேதனையை ஏற்படுத்துகிறது என்றார்.