தமிழர்களின் பலம் ஒற்றுமையாக இருப்பதே என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மக்கள் சந்திப்பு யாழ் கொடிகாமத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உப தலைவர் செ.மயூரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், ‘கடந்த காலங்களிலே பல கசப்புணர்வுகள் இருந்தன. அவை பற்றிப்பேசி இனத்தை முன்கொண்டுசெல்ல முடியாது. ஆகவே நாங்கள் அனைவருமே ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது. தேர்தல் நோக்கத்திலே நாங்கள் செயற்படுவோமாக இருந்தால் ஒற்றுமையாக செயற்படுவது மிகக் கடினம். தேர்தலை ஒருபுறத்திலே வைத்துவிட்டு தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை அடக்கிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக அனைவரும் ஒன்றாக நிற்போமானால் எங்களுடைய செய்தியை பலமாகச் சொல்லமுடியும். இன்று இருக்கும் நிலையிலே சாத்தியப்படக்கூடிய விடயமாகப் பார்க்கும்போது, முதலில் 13வது திருத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும், அதே நேரத்தில் தமிழ் மக்கள் தாங்களே தங்களுடைய பகுதிகளில் தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக் கூடிய ஒரு அதிகாரப் பகர்வை எடுக்கவேண்டும் என்ற இந்த அடிப்படை நோக்கத்திலே நாங்கள் அனைவரும் வேலைசெய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.