யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டனர்.
வலிகாமம் வடக்கு பகுதிகளில் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படும் மாடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதை எதிர்த்தும், குற்றச்செயல்கள் குறித்து பொலிஸார் அக்கறையுடன் செயற்படுவதில்லை என்றும், குற்றச்செயல்கள் அல்லது வேறு பிரச்சினைகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினாலும் உரிய நேரத்திற்கு அவர்கள் வருவதில்லை என தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்ட இடத்தில் பசு ஒன்றையும் கட்டி போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டமானது மல்லாகத்தில் உள்ள காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்னால் நடைபெற்றது. போராட்டத்தின் முடிவில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. குறித்த பொலிஸ் அத்தியட்சகர் இன்றையதினம் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் போராட்டமானது தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.