பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முல்லைத்தீவு- துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் குறிப்பாக வடமாகாண ஆளுநர், வடமாகாண போக்குவரத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றச்சுமத்தியுள்ளனர்.

மாறாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் உரிய அறிவுறுத்தல்கள் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தும் மாணவர்கள் இன்றும் பாதிக்கப்படும் நிலையே காணப்படுகிறது.

இவ்வாறு பேருந்துகள் ஏற்றாமல் செல்வதால் வீதியை மறித்து பாரிய போராட்டம் ஒன்றை செய்தபோது பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் மாங்குளம் நீதிமன்றுக்கு கொண்டு சென்று வடமாகாண போக்குவரத்து பிரிவினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

இதனைவிட இலங்கை போக்குவரத்து சபை உயர் அதிகாரிகளால் மாணவர்களை பருவகால சிட்டை பெறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

மாணவர்கள் பருவகால சிட்டையை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை மாறாக பருவகால சிட்டை பெற்றபின்னர் ஏற்றாமல் செல்வது அதிகரித்திருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மாணவர்களை ஏற்றாது செல்லும் நிலை தொடரும் இந்த நிலையில் (26) மாலை மாங்குளம் மகாவித்தியாலயத்தில் இருந்து வீடுசெல்ல முடியாது மாணவர்கள் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக தவித்து நின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் தொடர்ந்தும் பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் நிலையில் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

தொடரும் இந்த நிலைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் – மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews